Published : 16 Aug 2021 04:11 PM
Last Updated : 16 Aug 2021 04:11 PM
தலிபான்களுடனான நட்புறவுக்குத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.
தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் செல்கின்றனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
ஆப்கானிஸ்தானில் அதிகாரபூர்வமாகத் தங்கள் ஆட்சியைத் தலிபான்கள் அமைக்க உள்ளனர். இந்த நிலையில் தலிபான்களுக்குத் தங்களது ஆதரவை சீனா வழங்கியுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறும்போது, “ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் பாதையைத் தீர்மானிக்கும் உரிமையை சீனா மதிக்கிறது. மேலும், ஆப்கானிஸ்தானின் முன்னேற்றத்திற்கு உதவவும் தயாராக இருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானுடனான (தலிபான்கள்) நட்புறவுக்குத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, தலிபான்களின் பிரதிநிதிகள், சீன வெளியுறவுத்துறை வாங் யீ-ஐ சில வாரங்களுக்கு முன்பு சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT