Published : 12 Aug 2021 02:41 PM
Last Updated : 12 Aug 2021 02:41 PM
ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபரின் மகனை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். கஸ்னி மாகாணத்தைக் கைப்பற்றியதோடு நாட்டிலுள்ள 34 மாகாணங்களில் 10ஐ அவர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்னும் 90 நாட்களில் தலைநகர் காபூல் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என அமெரிக்கா கணித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.
முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறுகிய காலத்தில் 10 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். குந்தூஸ், தலூக்கான், ஷேபேர்கான், ஜரான்ஜ், சமங்கன், ஃபாரா, கஸ்னி உள்ளிட்ட 10 மாகாணங்களை தலிபான்கள் வசம் சென்றுவிட்டது.
90 நாட்களில் காபூல்:
இந்நிலையில் வெறும் 30 நாட்களில் காபூலை தலிபான் தீவிரவாதிகள் தனிமைப்படுத்தி விடுவார்கள். அதிகபட்சம் 90 நாட்களில் ஒட்டுமொத்த காபூலையும் அவர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "காபூல் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும் என்பது தலிபான் தீவிரவாதிகள் முன்னேறிச் செல்லும் வேகத்தைப் பொருத்து அமையும்" என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை 10 மாகாணங்களில் தலிபான்களின் கை ஓங்கியுள்ளது. தெற்கு ஆப்கானிஸ்தானில் போலீஸ் தலைமையகத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
இத்தகைய சூழலில் பொதுமக்கள் மிகக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை 5 லட்சம் பேர் நாடு முழுவதும் அங்குமிங்குமாக இடம்பெயர்ந்து வருவதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. வேலையிழப்பு, உணவுப் பஞ்சம் என பொருளாதார நெருக்கடி அங்கு முற்றி வருகிறது.
தலிபான் தீவிரவாதிகளின் பிடி மென்மேலும் இறுகும் சூழலில் அந்நாட்டு அரசியல் தலைவர் அப்துல்லா அப்துல்லா, உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் சர்ச்சையில் ஒதுங்கி நிற்கக்கூடாது என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT