Published : 12 Aug 2021 12:15 PM
Last Updated : 12 Aug 2021 12:15 PM
தலிபான்களின் தொடர் தாக்குதல் காரணமாக ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் குலாம் பகுதிதீன் கூறும்போது, “கடந்த 2 மாதங்களாக ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர் காரணமாக 34 மாகாணங்களிலிருந்து சுமார் 60,000க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. தலிபான்களின் தாக்குதல் ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது” என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றும் முயற்சிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை 7 மாகாணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். கடந்த வாரம் ஆப்கனின் பிரபல நகைச்சுவை நடிகர் நசார் முகமத் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவங்கள் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த நிலையில் இளம்பெண் ஒருவரைத் தலிபான்கள் கொலை செய்தனர். மேலும், ஆப்கானிஸ்தானின் அரசு ஊடக மையத் தலைவர் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருவதால், ஆப்கன் மீதும், பொதுமக்கள் மீதும் தலிபான்கள் தங்களது தாக்குதலை அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT