Published : 12 Aug 2021 10:25 AM
Last Updated : 12 Aug 2021 10:25 AM
ஆப்கானிஸ்தானில் உள்ள குந்துஸ் விமானப் படைத்தளத்தைக் கைப்பற்றிய தலிபான் தீவிரவாதிகள், இந்தியா பரிசாக வழங்கிய எம்ஐ-35 ரக ஹெலிகாப்டரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஆப்கானிஸ்தானுக்கு 2019-ம் ஆண்டில் 4 எம்ஐ-35 ரக ஹெலிகாப்டர்களைப் பரிசாக இந்தியா வழங்கியது. இந்த 4 ஹெலிகாப்டர்களில் ஒன்றைத்தான் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
பெலாரஸ்-ஆப்கானிஸ்தான் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கி, அதற்கு நிதியுதவியையும் அளித்தது. இந்த விமானங்களை இயக்க ஆப்கன் ராணுவத்தினருக்குப் பயிற்சியையும் இந்திய ராணுவம் சார்பில் அளிக்கப்பட்டது. ஆனால், பராமரிப்பு மட்டும் ஆப்கன் அரசின் வசம் இருந்தது.
இந்தியா வழங்கிய எம்ஐ-24வி ஹெலிகாப்டர் முன் தலிபான்கள் நின்றிருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
பிரிட்டனைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பாக ஆய்வு செய்துவரும் ஐஐஎஸ்எஸ் அமைப்பின் ஆய்வாளர் ஜோஸப் டெம்ப்சே தனது ட்விட்டர் பக்கத்தில், தலிபான்கள் ஹெலிகாப்டரைக் கைப்பற்றியுள்ள காட்சியை வீடியோவாகப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது. தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் அதன்பின் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட்டு ஹமீது கர்சாய் அதிபரானார். அமெரிக்கப் படைகள், நேட்டோ படைகள் இருந்ததால், தலிபான் தீவிரவாதிகள் ஒடுங்கி, அடங்கி இருந்தனர்.
அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்பின், புதிய அதிபராக வந்த ஜோ பைடன் இந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்தார். இதன்படி, அமெரிக்கப் படைகளும், நேட்டோ படைகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து பெரும்பகுதி வெளியேறிவிட்டனர்.
இதனால் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள். இரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியையும் கைப்பற்றி, சுங்கவரி வசூலித்து அதன் மூலம் பணம் ஈட்டவும் தலிபான்கள் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 7 மாகாணங்களைக் கைப்பற்றியுள்ளனர். குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பூமியில் மிகவும் ஆபத்தான, மோசமான இடமாக ஆப்கானிஸ்தான் மாறிவருவதாக யுனிசெஃப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT