Published : 10 Aug 2021 03:04 PM
Last Updated : 10 Aug 2021 03:04 PM
ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் தலிபான்களின் பிடி இறுகிறது. அங்குள்ள மஷார் இ ஷரீப் நகரை தலிபான்கள் தற்போது குறிவைத்துள்ளனர். இது ஆப்கானிஸ்தானின் நான்காவது பெரிய நகரம். தங்களின் அடுத்த இலக்கு மஷார் இ ஷரீப் நகர் தான் என தலிபான்கள் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திவிட்டனர்.
இதனால், அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்ப அரசு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி இந்தியர்கள் வெளியேறும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 முனை தாக்குதல்:
தலிபான் தீவிரவாத கும்பலின் செய்தித் தொடர்பாளர் பேஸ்புக் பக்கத்தின் வாயிலாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், மஷார் இ ஷரீஃப் நகரில் நான்கு முனை தாக்குதல் நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். நகரின் மேற்குப் பகுதியில் உள்ள குண்டூஸ், கிழக்குப் பகுதியில் உள்ள தலோகான் ஆகிய பகுதிகளையும் மேற்கே உள்ள ஷேர்பேர்கன் பகுதியையும் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக தலிபான்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், அந்த நகரம் முழுமையாக தலிபான்கள் கட்டுக்குள் வருவதற்குள் இந்தியர்கள் வெளியேறிவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மஷார் இ ஷரீப் நகரும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டால் நான்கு முனை தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
கைகழுவுகிறதா அமெரிக்கா?
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
ஆனால், தலிபான்கள் தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில் ஆப்கன் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் முழுமையாக படைகளை வாபஸ் பெற்று அந்நாட்டு விவகாரத்தில் அமரிக்கா கைகழுவ முயற்சிப்பதாக சர்வதேசப் பார்வையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதனை உறுதிப்படுத்துவது போலவே, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்ஃபி , “அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும்போது தலிபான்கள் தாக்குதலில் ஈடுபடுவார்கள் என்பது ஏற்கெனவே கணிக்கப்பட்டது தான். இது ஆப்கன் அரசின் பிரச்சினை. இனி அவர்கள்தான் அவர்களின் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். இருப்பினும், நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து ஆப்கன் ராணுவத்துக்குப் பயிற்சி அளிப்போம்” என்று கூறியிருக்கிறார்.
அல்-கொய்தா தீவிரவாதிகளை கட்டுப்படுத்த, ஒசாமா பின் லேடனை ஒழிக்க அமெரிக்காவுக்கு ஆப்கன் மண் தேவைப்பட்டது. தற்போது, அமெரிக்கா முற்றிலுமாக வெளியேறுகிறது.
இரட்டை கோபுர தாக்குதலில் தொடங்கியது, இம்மாதத்துடன் முடிகிறது:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மைய கட்டிடத்தை (இரட்டை கோபுரம்) அல்-கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி விமானங்களை மோதி தகர்த்தனர். அதன் பிறகு அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.
அங்கு தனது படைகளை நிறுத்தி தீவிரவாதிகளையும், தலிபான்களையும் அமெரிக்கா ஒடுக்கியது. தற்போது அங்கிருந்த அமெரிக்கப் படைகள் சிறிது சிறிதாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதிக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் கத்தாரில் ரஷ்யாவின் ஏற்பாட்டில் ஆப்கன் பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையிலும் தீர்வு எட்டப்படவில்லை என்றால் ஆப்கானிஸ்தான் நிரந்தரமாக தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அபாயம் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT