Published : 09 Aug 2021 04:28 PM
Last Updated : 09 Aug 2021 04:28 PM

அமெரிக்காவில் வேகமெடுக்கும் டெல்டா வைரஸ்: பூஸ்டர் டோஸை பரிந்துரைக்கும் தொற்று நோய் சிகிச்சை நிபுணர்

அமெரிக்காவில் உருமாறிய கரோனா டெல்டா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப் பரிந்துரைத்திருக்கிறார் அந்நாட்டின் தொற்றுநோய் சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஆண்டனி பாஸி.

இது தொடர்பாக, சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில் கூறியிருப்பதாவது:

மூன்றாவது பூஸ்டர் டோஸ் வழங்குவதை நாம் வேறொரு கோணத்தில் பார்க்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களுக்கே முதலில் மூன்றாவது பூஸ்டர் டோஸ் வழங்கப்பட வேண்டும்.

இஸ்ரேலில் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அங்குள்ள 60 வயதுக்கு மேற்பட்டோரில் பாதி பேருக்கு மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்கப்படவிருக்கிறது. அதேபோல் அமெரிக்காவிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அமெரிக்காவில் தொற்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையமானது யாருக்கெல்லாம் பூஸ்டர் தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கண்காணித்து தரவுகளைத் திரட்டி வருகிறது. அதற்கேற்ப தடுப்பூசி பூஸ்டர் டோஸை திட்டமிட வேண்டும்.

தடுப்பூசி போட்டவர்களுக்கு கரோனா பாதித்தால் அவர்கள் மருத்துவமைக்குச் செல்லாத வகையில் தப்பித்துக் கொள்ளலாம். ஆனாலும் கூட அவர்களால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவில் கடந்த ஜூன் 25 ஆம் தேதிக்குப் பின்னர் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கே மீண்டும் ஒரு லட்சம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் வேற்றுருவாக்கங்கள் அடைந்து இப்போது டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகப் பதிவு செய்யப்படும் கரோனா தொற்றுகளில் 80%க்கும் மேல் டெல்டா வைரஸால் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது நாள்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தெற்கு மாகாணங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

டெல்டா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்பதாலும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களைக்கூட பாதிக்கலாம் என்பதாலும் வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு பூஸ்டர் டோஸாக மூன்றாவது டோஸ் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியேஸஸ் பேசுகையில், "உலக நாடுகள் தங்கள் மக்களின் உயிரைப் பாதுகாக்க காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதற்காக தடுப்பூசி மொத்த உற்பத்தியில் ஏற்கெனவே மிக அதிகமான டோஸ்களைப் பயன்படுத்திவிட்ட வளர்ந்த நாடுகள் இன்னும் அதிகமாக இதனைப் பயன்படுத்த நினைப்பது ஏற்புடையது அல்ல.

பெரும்பாலான தடுப்பூசி அதிக வருவாய் ஈட்டும் நாடுகளுக்குச் செல்வதை மாற்றியமைக்க வேண்டும். அதை மடைமாற்றி குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்" என்று கூறினார்.

ஆனால், ஏற்கெனவே இந்தக் கோரிக்கையை பிரான்ஸ், ஜெர்மணி நாடுகள் நிராகரித்துவிட்டன. தற்போது, அமெரிக்காவும் பூஸ்டர் டோஸ் வழங்குவதை மறைமுகமாக உணர்த்தி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x