Published : 09 Aug 2021 02:16 PM
Last Updated : 09 Aug 2021 02:16 PM
அமெரிக்காவில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் கரோனா டெல்டா வைரஸ் பரவல் அதிகரித்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
கரோனா பரவல் தொடங்கி அங்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டபோது நாளொன்றுக்கு 2.50 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர். பின்னர் இந்த எண்ணிக்கை குறைந்தது. கடந்த நவம்பர் மாதத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கும் சூழல் இருந்தது. பின்னர் 8 மாதங்கள் போராட்டத்துக்கு பிறகு தினசரி பாதிப்பு என்பது 10 ஆயிரம் என்ற அளவில் குறைந்தது.
இந்தநிலையில் தற்போது அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகப் பதிவு செய்யப்படும் கரோனா தொற்றுகளில் 80%க்கும் மேல் டெல்டா வைரஸால் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தினால், விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பும் என அமெரிக்க அரசு எதிர்பார்த்தது. ஆனால், அங்கு டெல்டா வகை வைரஸ் தீவிரமாக பரவி அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது நாள்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தெற்கு மாகாணங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மக்கள் கட்டுப்பாடுகளை மதிக்காமலும் முககவசம் அணியாமலும் இருப்பதே தொற்று உயர்வதற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் டெல்டா வைரஸ் பரவி மருத்துவ சுகாதார கட்டமைப்பை திணற வைத்துள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். மருத்துவ கட்டமைப்பு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சிகிச்சை அளிப்பதற்கு செயற்கை சுவாச கருவிகளும் குறைவாகவே உள்ளன. ஆனால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் சில இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேகம் குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ள போதிலும் இதனை தீவிரப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT