Published : 05 Aug 2021 09:10 PM
Last Updated : 05 Aug 2021 09:10 PM
தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும், அலுவலகம் வர அனுமதி மறுக்கப்படும், சம்பளம் வழங்கப்படாது, உணவகங்கள், ஷாப்பிங் மால்களில் நுழையத் தடை விதிக்கப்படும் என அடுக்கடுக்காக பாகிஸ்தான் வெளியிட்ட கெடுபிடிகளால் அந்நாட்டு மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இதனால், தடுப்பூசி மையங்களில் மக்கள் ஆர்வத்துடன் மக்கள் குவிந்து வருகின்றனர். சில தடுப்பூசி மையங்களில் கிலோமீட்டர் கணக்கில் மக்கள் அணிவகுத்துக் காத்து நின்றனர்.
உலகம் முழுவதும் கரோனா டெல்டா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சில நாடுகளில் மூன்றாம், நான்காம் அலை தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானிலும் அண்மைக்காலமாக தொற்று சற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாததால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்கும் வகையில் பல்வேறு கெடுபிடிகளை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தெற்கு கராச்சி நகரில் ஒரு தடுப்பூசி மையத்தில் நின்றிருந்த அப்துல் ரவுஃப் என்ற வங்கி ஊழியர் ராய்டர்ஸ் நிறுவனத்திடம் இவ்வாறாகக் கூறினார்.
"எனக்கு கரோனா பற்றி அச்சமில்லை. ஆனால், நான் தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் எனது சம்பளத்தை நிறுத்திவிடுவார்கள், சிம் கார்டு சேவை துண்டிக்கப்பட்டுவிடும். அதனாலேயே நான் இன்று இங்கு தடுப்பூசிக்காகக் காத்திருக்கிறேன். இது எனக்கு இரண்டாவது டோஸ்" என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானுக்கு தடுப்பூசித் திட்டம் ஒன்றும் புதிதல்ல. பாகிஸ்தான் போலியோவுக்கு எதிராக தடுப்பூசித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய வரலாறு இருக்கிறது.
ஆனால், கரோனா தடுப்பூசிக்கு மட்டும் அந்நாட்டு மக்கள் தயக்கம் காட்டுவதால் அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகை 200 மில்லியன். இவர்களில் வெறும் 6.7 மில்லியன் மக்கள் மட்டுமே இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் அதிரடி அறிவிப்பால் ஒரே நாளில் ஒரு மில்லியன் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இதுவரை ஒரு மில்லியன் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 23,000 பேர் உயிரிழந்தனர். நேற்றைய நிலவரப்படி அங்கு ஒரே நாளில் 5661 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் 70% பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT