Published : 05 Aug 2021 04:47 PM
Last Updated : 05 Aug 2021 04:47 PM
டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்தங்கள் என வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ள நிலையில் வரும் செப்டம்பரில் இருந்து நிச்சயமாக 3-வது டோஸ் வழங்கப்போவதாக ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் பிடிவாதமாகத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வரும் செப்டம்பர் தொடங்கி வயதானோர், கரோனா தாக்கத்துக்கு அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்குவது தொடர்பாக பிரான்ஸ் பரிசீலித்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஜெர்மனி நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நோய் எதிர்ப்பு சக்தி பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, முதியவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் கரோனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று பேசிய, உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியேஸஸ், "உலக நாடுகள் தங்கள் மக்களின் உயிரைப் பாதுகாக்க காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதற்காக தடுப்பூசி மொத்த உற்பத்தியில் ஏற்கெனவே மிக அதிகமான டோஸ்களைப் பயன்படுத்திவிட்ட வளர்ந்த நாடுகள் இன்னும் அதிகமாக இதனைப் பயன்படுத்த நினைப்பது ஏற்புடையது அல்ல.
பெரும்பாலான தடுப்பூசி அதிக வருவாய் ஈட்டும் நாடுகளுக்குச் செல்வதை மாற்றியமைக்க வேண்டும். அதை மடைமாற்றி குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்" என்று கூறியிருந்தார்.
ஆனால், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் உலக சுகாதார நிறுவன கோரிக்கையை புறந்தள்ளும் வகையில் தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளன.
வளர்ந்த நாடுகள் தேவைக்கு அதிகமாக தடுப்பூசிகளை தேக்கிவைப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜெர்மனி அரசு இதுவரை 30 மில்லியன் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்குக் கொடுத்துள்ளதாகக் கூறுகிறது.
மூன்றாவது டோஸ் என்ற பாதுகாப்பு வளையத்துடன் நாட்டு மக்களைக் காப்பதை உறுதி செய்வதுடனேயே உலக நாடுகளுக்கும் உதவி வருவதாக ஜெர்மனி சுகாதார அமைச்சகம் கூறியிருக்கிறது.
பிரான்ஸில் கரோனா 4வது அலை வேகமெடுத்து வரும் சூழலில், அங்கு மக்கள் அரசின் கரோனா தடுப்புக் கொள்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், முதியோர், மற்றும் நோய் பாதிப்புக்கு வாய்ப்புள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்குவதில் முனைப்பு காட்டிவருகிறார் அதிபர் மேக்ரோன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT