Published : 04 Aug 2021 06:44 PM
Last Updated : 04 Aug 2021 06:44 PM
இந்தோனேசியாவில் கரோனா தொற்று கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில் அங்கு கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 1,747 பேர் பலியாகியுள்ளனர்.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள இந்தோனேசியாவில் அண்மைக்காலமாக கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. டெல்டா வைரஸ் பரவல் காரணமாக அந்நாட்டின் பல பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
தலைநகர் ஜகார்த்தா, ஜாவா பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மால்கள், மசூதிகளில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளை அரசு அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை கார் பார்க்கிங்கில் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளும் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து இந்தோனேசிய அரசு பல்வேறு நாடுகளை தொடர்பு கொண்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை பெறும் முயற்சியில் ஈடுபட்டது. சீனா, சிங்கப்பூர், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆக்சிஜன் கோரி தூதரகம் வழியாக அணுகியது.
இந்தியாவில் கரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடிய மே மாதத்தில் 3,400 ஆக்சிஜன் சிலிண்டர்களை கொடுத்து இந்தோனேசியா உதவியது. இதையடுத்து இந்தோனேசியாவுக்கு கப்பலில் இந்தியா ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தது.
இந்தநிலையில் இந்தோனேசியாவில் கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 35,867 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 3,532,567 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,907,920 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 1,747 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தோனேசியாவில் கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 100,636 ஆக அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT