Published : 20 Feb 2016 11:12 AM
Last Updated : 20 Feb 2016 11:12 AM
வட கொரியா மேலும் சில ராக்கெட்களை ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்தார்.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. கடந்த 7-ம் தேதி நீண்ட தூரம் செல்லக்கூடிய ராக்கெட் ஒன்றை வட கொரியா ஏவியது. இந்த ராக்கெட்டை தேவையான சமயத்தில் ஏவுகணையாக மாற்றி பயன்படுத்த முடியும் என்றும் மேலும் இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில் வட கொரியாவின் ராக்கெட் தொழில்நுட்ப விஞ்ஞானி களை கவுரவிக்கும் நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கிம் ஜோங் உன், “கடந்த 7-ம் தேதி ராக்கெட் ஏவும் பணியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் மிகச் சிறந்த தேசபக்தர்கள், போற்றத் தகுந்த ஹீரோக்கள்” என வர்ணித்தார்.
“வட கொரியா மேலும் சில ராக்கெட்களை ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளது. நமது அமைதி மற்றும் இறையாண்மையை பறிக்க முயலும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் விண்வெளியில் ஆளுமை செலுத்துவது அவசியம். விண்வெளி திட்டங்களை மேம்படுத்துவதே வட கொரியாவின் இலக்கு” என்றும் அவர் பேசியதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே வட கொரியாவுக்கு எதிரான புதிய தடைகளுக்கு ஒப்புதல் அளித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று கையெழுத்திட்டார்.
வட கொரியாவில் இருந்து பொருட்கள் அல்லது பெரும் அழிவை ஏற்படுத்தும் ஆயுத தொழில்நுட்பங்களை பிற நாடுகள் இறக்குமதி செய்ய ஏற்கெனவே தடை உள்ளது. இத்தடைகள் தற்போது மேலும் இறுக்கப் பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT