Last Updated : 10 Feb, 2016 08:37 PM

 

Published : 10 Feb 2016 08:37 PM
Last Updated : 10 Feb 2016 08:37 PM

வடகொரியா ராணுவ தளபதிக்கு மரண தண்டனை: அதிபர் கிம் ஜாங் அதிரடி

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ராணுவ தளபதிக்கு வடகொரியா மரண தண்டனை நிறைவேற்றி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தந்தையின் மறைவுக்கு பின் கடந்த 2011-ல் வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்றார். அப்போது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்து வருகிறார். தென் கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் நான்காவது முறையாக அதிபர் கிம் ஜாங் உன் நடத்திய அணு ஆயுத சோதனை சர்வதேச நாடுகளை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்தது. இதற்காக ஐ.நாவும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

எனினும் தனது ராணுவ பலத்தை விரிவாக்கும் வகையில் சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனையை நடத்தியது. உலக நாடுகளின் எதிர்ப்பு காரணமாக இந்த தகவலை உறுதி செய்ய மறுத்த வடகொரியா அரசு ராக்கெட் மூலம் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தது.

இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ராணுவ தளபதி ரி யோங் கில்லுக்கு வடகொரியா மரண தண்டனை நிறைவேற்றி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவின் பேரில் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை தென்கொரியாவின் ‘யோன்ஹப்’ என்ற செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதே சமயம் எந்த இடத்தில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எந்த முறையில் அது நிறைவேற்றப்பட்டது போன்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

ஊழல் புகார்களில் சிக்கும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளை வடகொரியா பெரும்பாலும் பகிரங்கபடுத்துவதில்லை. இதனால் நீண்ட மாதங்களாக வெளியுலக பார்வையில் படாமல் இருக்கும் ஒரு சில ராணுவ மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x