Published : 22 Jul 2021 04:55 PM
Last Updated : 22 Jul 2021 04:55 PM
கரோனா பரவல் குறித்த அச்சம் இருப்பதால் மும்பை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டால் நிரவ் மோடி தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி மோசடி செய்துவிட்டு, குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, 2018-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன.
மேலும், அவரது நிறுவனத்தின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது நிரவ் மோடி ஜாமீனில் இருந்து வருகிறார். நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தும் பணியிலும் அமலாக்கப்பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த வழக்கில் அவர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
லண்டன் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிரவ் மோடி தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் எட்வர்ட் பிட்ஜெரால் கூறியதாவது:
நிரவ் மோடியை அடைக்க தயார் படுத்தப்பட்டுள்ள மும்பை ஆர்தர் ரோடு சிறைசாலையில் கரோனா பரவல் குறித்த அச்சம் உள்ளது. இதனால் நிரவ் மோடி தற்போது மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். மனநல ஆலோசனைகளையும், அவர் முறையாக பெறவில்லை.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்குள்ள சிறையில் நிரவ் மோடி அடைக்கப்பட்டால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படலாம். அவர் தற்கொலை செய்துகொள்ளவும் அதிக வாய்ப்புள்ளது. நிரவ் மோடியின் தாய் தற்கொலை செய்துள்ளார். இந்த சூழ்நிலையை உணர வேண்டும். அவருக்கு மருத்துவ ஆலோசனைகள் தேவையாக உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT