Published : 20 Jul 2021 06:40 PM
Last Updated : 20 Jul 2021 06:40 PM
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள சில வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடைசி நேரத்தில் ஒலிம்பிக் ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை மறுக்க முடியாது என போட்டித் தலைவர் டொஷிரோ மூட்டோ தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்களும், வீராங்கனைகளும் ஜப்பான் வந்துள்ளனர்.
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் மொத்தம் 33 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 339 பதக்கங்கள் வழங்கப்படும். இதில் உலகம் முழுவதுமிருந்து 11500 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களில் ஆடவர் 51% பெண்கள் 49%.
போட்டிகள் தொடங்க 3 நாட்களே உள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், ஒலிம்பிக் போட்டிக்காக வந்தவர்களில் மொத்தம் 68 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தலைவர் டொஷிரோ மூட்டோவிடம், கரோனா பரவல் அதிகரித்தால் கடைசி நேரத்தில் போட்டிகளை ரத்து செய்ய வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மூட்டோ, "தொற்று எண்ணிக்கையை உற்று கவனித்து வருகிறோம். தேவை ஏற்பட்டால் போட்டி ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை இப்போதே முன்னறிந்து கூற முடியாது.
ஆகையால், எண்ணிக்கை அதிகரித்தால் அது குறித்து விவாதிப்போம். கரோனா வைரஸ் நிலவரம் பொறுத்து ஐந்து முனை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பது பேசிவைக்கப்பட்டதே. கரோனா எண்ணிக்கை அதிகரிக்கலாம், குறையவும் செய்யலாம். ஒருவேளை அதிகரித்தால் என்ன செய்யலாம் என்பது பற்றி நாங்கள் விவாதிப்போம்" என்றார்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு நடக்க வேண்டிய போட்டிகள் கரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, இன்னும் மூன்று நாட்களில் போட்டி தொடங்கவுள்ள நிலையில், பார்வையாளர்கள் இல்லாமல் இப்போட்டி நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT