Published : 17 Jul 2021 08:14 PM
Last Updated : 17 Jul 2021 08:14 PM
பாகிஸ்தானுக்கான ஆப்கன் தூதரின் மகள் கடத்தப்பட்டார். கடத்தப்பட்டு 7 மணி நேரம் பிணையில் வைக்கப்பட்டிருந்த அவர் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக இருப்பவர் நஜீப் அலிகில். இவரது மகள் சில்சிலா அலிகில். இவர் இன்று காலை கடத்தப்பட்டார். வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரை மர்ம கும்பல் கடத்திச் சென்றது.
பின்னர் சில மணி நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அவர் மோசமாக துன்புறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து உடனடியாக கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அண்மையில், பாகிஸ்தானின் கைபர் பக்துவான் மாகாணத்தில் சீனப் பொறியாளர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் பலியாகினர். இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
பாகிஸ்தானில் தொடர்ந்து வெளிநாட்டவரைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது அரசுக்கு நெருக்கடிய ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT