Published : 17 Jul 2021 12:39 PM
Last Updated : 17 Jul 2021 12:39 PM
எங்களை மன்னித்துவிடுங்கள். அவர் எப்படி இறந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது என்று இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மறைவுக்கு தலிபான்கள் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளாக ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேறும் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான எல்லைப்புறப் பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், அரசு சார் கட்டிடங்களையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் - தலிபான்கள் இடையே கடுமையான சண்டை நடக்கிறது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சூழலில் இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் ஆப்கன் போரை கந்தஹாரிலிருந்து பதிவுசெய்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் ஆப்கன் படைகளுடன் வண்டியில் சென்று கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் பிரபல இந்தியப் புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் கந்தஹாரில் ஆப்கன் படைகள் - தலிபான்களுக்கு இடையே நடந்த தாக்குதலில் டேனிஷ் சித்திக் உயிரிழந்தார்.
இந்த நிலையில் டேனிஷ் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபிமுல்லா முஜாகிதீன் கூறும்போது, “ புகைப்படப் பத்திரிகையாளர் யாருடைய தாக்குதலின்போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் எப்படி இறந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது.
டேனிஷ் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. எங்களை மன்னித்துவிடுங்கள். போர்ப் பகுதிகளில் நுழையும் பத்திரிகையாளர்கள் எங்களிடம் அதனைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்த தனிப்பட்ட நபருக்கான பாதுகாப்பில் நாங்கள் கவனம்கொள்ள இயலும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT