Published : 18 Feb 2016 11:08 AM
Last Updated : 18 Feb 2016 11:08 AM
ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் புத்ரோஸ் காலி (93), எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நேற்று முன்தினம் காலமானார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த புத்ரோஸ் காலி 1992-ல் ஐ.நா. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இப்பதவிக்கு ஆப்பிரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் என்ற பெயரை பெற்றார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகளுடன் முடிவடைந்தது. இரண்டாவது முறையாக இவர் இப்பதவிக்கு தேர்வு செய்யப் படுவதை பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தனது ரத்து அதிகாரம் மூலம் தடுத்துவிட்டது.
எகிப்து முன்னாள் வெளியுறவு அமைச்சரான புத்ரோஸ் காலி, சோமாலியா, ருவாண்டா, மத்திய கிழக்கு ஆசியா, மற்றும் யுகோஸ்லாவியாவில் நெருக்கடி நிலவிய மிகக் கடினமாக காலகட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.
அமெரிக்காவுடன் தொடர் மோதல் காரணமாக அந்நாட்டின் எதிர்ப்புக்கு ஆளானார். இதனால் 1996-ல் இவருக்கு பதிலாக கோஃபி அன்னானை ஆதரிக்க அமெரிக்கா முடிவு செய்தது.
கெய்ரோவில் 1922, நவம்பர் 14-ம் தேதி காப்டிக் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். கெய்ரோ பல்கலைக்கழகம் மற்றும் பாரிஸ் நகரில் படித்த புத்ரோஸ் காலி வாழ்நாள் முழுவதும் பிரான்ஸ் நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
ஐ.நா. பதவிக்கு பிறகு பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் அமைப்புக்கு பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.
ஐ.நா.வின் தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி மூன், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே உட்பட உலகத் தலைவர்கள் பலர் புத்ரோஸ் காலி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT