Published : 09 Jul 2021 02:57 PM
Last Updated : 09 Jul 2021 02:57 PM
உலக அளவில் பட்டினியில் நிமிடத்துக்கு 11 பேர் உயிரிழக்கிறார்கள். உணவுப் பஞ்சம் உள்ளிட்ட சூழல் உலக அளவில் கடந்த ஆண்டைவிட 6 மடங்கு அதிகரித்துள்ளது என்று வறுமைக்கு எதிரான அமைப்பான ஆக்ஸ்ஃபாம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வறுமைக்கு எதிரான அமைப்பான ஆக்ஸ்ஃபாம், உலக அளவில் கரோனா காலத்தில் பட்டினி குறித்து 'பல்கிப் பெரிய பட்டினி வைரஸ்' என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''கரோனாவால் ஏற்பட்ட உணவுப் பஞ்சம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த உணவுப் பஞ்சத்தால் மட்டும் உலக அளவில் நிமிடத்துக்கு 7 பேர் உயிரிழக்கின்றனர். பட்டினியால் உலக அளவில் நிமிடத்துக்கு 11 பேர் உயிரிழக்கின்றனர்.
உலக அளவில் கடந்த ஆண்டு பட்டினி, உணவுப் பாதுகாப்பின்மை, பஞ்சம் போன்ற காரணிகளால் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது அது உலக அளவில் 15.5 கோடியாக அதிகரித்துள்ளது. மக்கள் உலக அளவில் வறுமையையும், பட்டினியையும், பஞ்சத்தையும் எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் முக்கியக் காரணமாக இருக்கிறது.
பட்டினியுடன் போரிடுவதற்கு பதிலாக, உலக நாடுகள் தங்களுக்குள் போரிட்டு வருகின்றன. கோடிக்கணக்கான மக்கள் ஏற்கெனவே காலநிலையால் ஏற்படும் பேரழிவுகளாலும், பொருளாதார இடர்ப்பாடுகளாலும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பட்டினியும் சேர்ந்துள்ளது.
உலக அளவில் ராணுவத்துக்குச் செலவிடும் தொகை 5,100 கோடி டாலர்களாக (ரூ.38 ஆயிரம் கோடி) அதிகரித்துள்ளது. உலக அளவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவி வரும் ஐ.நா. செலவிடும் தொகையில் இது 6 மடங்காகும்.
ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் பட்டினி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. போரில் பட்டினி ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடிமக்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை மனிதநேய உதவிகள் கூட மறுக்கப்படுகின்றன.
மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாது, உணவைத் தேட முடியாது. அதற்கு முன்பாகவே நாடுகள் சந்தைகளையும், உணவுச் சந்தைகளையும், கால்நடைகளையும் குறிவைத்து அழித்துவிடுகின்றன.
தொடர்ந்து ஏற்பட்டு பேரழிவு தரக்கூடிய பட்டினியை நிறுத்த நாடுகளுக்கு இடையே நடக்கும் போரை நிறுத்த வேண்டும். போர் நடக்கும் பகுதியில் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஐ.நா.வின் பட்டினி போக்கும் முயற்சிக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்''.
இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் அமெரிக்காவின் தலைவர் அபே மேக்ஸ்மேன் கூறுகையில், “உலக வெப்பமயமாக்கல், பெருந்தொற்றால் மோசமடைந்த பொருளாதாரம் ஆகியவற்றால், உலக அளவில் உணவுப் பொருட்கள் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு உலக அளவில் ஒரு கோடி மக்களைப் பட்டினியில் தள்ளியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT