Published : 06 Jul 2021 07:07 AM
Last Updated : 06 Jul 2021 07:07 AM
கரோனா வைரஸின் பாதிப்பு குறைந்தநிலையில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜெர்மனி அரசு நேற்று நீக்கியது.
டெல்டா வகை உருமாறிய கரோனா வைரஸ், இந்தியா, இங்கிலாந்தில் அதிகமாக இருந்தாலும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் விரைவில் ஊரடங்கு கட்டப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளார். இதையடுத்து, ஜெர்மனியில் நோய்தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பான தி ராப்ர்ட் கோச் நிறுவனம் நேற்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.
அதில், “ இந்தியா, ரஷ்யா, போர்ச்சுகல், பிரிட்டன் நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. இதனால், ஜெர்மன் நாட்டைச் சாராதவர்கள் ஜெர்மனியில் வசிப்பவர்கள், இந்த நாடுகளின் பயணிகள் தடையின்றி பயணிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன் வெளிநாடுகளில் இருக்கும் ஜெர்மன் நாட்டு மக்கள் மட்டுமே அந்நாட்டுக்குள் வரலாம், மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு ஜெர்மனி அரசு தடை விதித்திருந்தது. அவ்வாறு ஜெர்மனி குடிமக்கள் வந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தி்க்கொண்டு, தடுப்பூசி செலுத்திக்கொண்டபின்புதான் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், அலுவல் மற்றும் வர்த்தகரீதியாக வரும் வெளிநாட்டவர்கள் கண்டிக்கப்பாக கரோனா நெகட்டிவ் பரிசோதனை சான்றிதழ் தேவை. நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால், 5 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருப்போர் தனிமைப்படுத்தத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் துபாய் அரசும் இந்தியர்கள் பயணிப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்கியது. ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகரித்த, சினோஃபார்ம், ஃபைஸர், ஸ்புட்னிக் வி, அஸ்ட்ராஜென்கா ஆகிய 4 தடுப்பூசிகளில் ஒன்றைச் செலுத்திய பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தியாவிலிருந்து வரும் பயணிகள், விமானம் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன் ரேபிட் ஆன்ட்டிபாடி பரிசோதனையும், துபாய் வந்திறங்கியபின், ஆர்டிபிசிஆர் பரிசோதனையும் நடத்தப்படும். இந்த பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வரும் 24 மணிநேரம் வரை பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT