Published : 03 Jul 2021 08:48 PM
Last Updated : 03 Jul 2021 08:48 PM
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மெகுல் சோஸ்கியை கடத்த சதித் திட்டம் தீட்டியதாக தங்கள் நாட்டின் மீது எழுந்துள்ள புகாரை டொமினிக்கன் நாட்டுப் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் மறுத்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய மெகுல் சோக்சி, 2018-லிருந்து ஆன்டிகுவா தீவில் வசித்துவந்தார்.
இதற்கிடையில் கடந்த மே 23-ம் தேதி அவர் திடீரென காணாமல் போனார். பின்னர் சில நாட்கள் கழித்து தன் காதலியுடன் கியூபா தப்ப இருந்தவரை டொமினிக்கன் தீவு போலீஸார் கைது செய்தனர்.
ஆனால், சோக்சி தரப்பு இதைமறுத்தது. அவர் கடத்தப்பட்டதாகவும், பார்பரா ஜராபிகா என்ற பெண் அவர் காதலியாக நடித்து கடத்தலுக்கு உதவியதாகவும் கூறினார். இதனால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பையும் விசாரித்த பின்னரே வழக்கின் அடுத்த விசாரணை என டொமினிக்கன் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், மெகுல் சோஸ்கியை கடத்த சதித் திட்டம் தீட்டியதாக தங்கள் நாட்டின் மீது எழுந்துள்ள புகாரை டொமினிக்கன் நாட்டுப் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும், இந்தியாவுடன் நாங்கள் இணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதையும் நாங்கள் மறுக்கிறோம். இது முட்டாள்தனமானது. இதுபோன்ற இழிவான செயல்களில் எங்கள் நாடு ஒருபோதும் ஈடுபடாது. எங்கள் மீதான குற்றச்சாட்டு துரதிர்ஷ்டவசமானது. இதை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், சோஸ்கியின் காதலியும் தான் கடத்தலில் ஈடுபடவில்லை எனக் கையை விரித்துள்ளார். சோஸ்கியின் காதலியாக இருந்த பார்பரா ஜராபிகா, "கடந்தாண்டு மெகுல் சோக்சி, ராஜ் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நட்புடன் பழகினார். போக போக காதலுடன் பேசத் தொடங்கினார். எனக்கு வைர மோதிரஙகள், நெக்லஸ் பரிசளித்துள்ளார். ஆனால் அவை எல்லாம் போலியானவை என்பது பின்னர்தான் தெரிந்தது.அவர் கடத்தப்பட்டதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், டொமினிக்கன் தீவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன், ஆன்டிகுவாவுக்குத் திரும்ப அனுப்பப்படுவதற்கான முயற்சிகளில் மெகுல் சோக்சியின் வழக்கறிஞர்கள் தீவிரமாக உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT