Published : 02 Jul 2021 03:22 PM
Last Updated : 02 Jul 2021 03:22 PM
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், மற்றும் உருமாற்றம் அடைந்த டெல்டா உள்ளிட்ட பல்வேறு வகை வைரஸ்களுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படும் வகையில் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு(Janssen Ad26.CoV2.S vaccine ) உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
இதுவரை உலக மக்களின் பயன்பாட்டுக்கு இருக்கும் தடுப்பூசிகள் அனைத்தும் 2 டோஸ் கொண்டவையாகும், ஆனால், ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் மட்டும் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது.
செயல்பாடு எப்படி
ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் ஜான்ஸன் ஏடி26.கோவிட் தடுப்பூசி உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்களான ஆல்ஃபா, பீட்டா, டெல்டா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுகிறது என்பது கடந்த 8 மாத கால ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தடுப்பூசி கரோனா வைரஸின் லேசான மற்றும் மிதமான பாதிப்புக்கு எதிராக 66.3 சதவீதம் சிறப்பாகச் செயல்படுகிறது, தீவிரமான நோய் தொற்றுக்கு எதிராக 76.3சதவீதம் சிறப்பாகச் செயலாற்றுகிறது.
இந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 28 நாட்களுக்குப்பின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகி தீவிரமான தொற்றுக்கு எதிராக 85.4 சதவீதமும், மருத்துவமனைக்கு செல்லவிடாமல் 93 சதவீதமும் தடுக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் துணைத் தலைவர் பால் ஸ்டோபல்ஸ் வெளியி்ட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் கரோனா வைரஸுக்கு எதிராக வலிமையான செயல்பாட்டை வழங்குகிறது. குறிப்பாக கரோனா வைரஸின் பல்வேறு வகை உருமாற்றம் அடைந்த வைரஸ், அதிகமான பரவல் வேகம் கொண்ட டெல்டா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுகிறது.
உடலில் நோய் எதிர்ப்புக்சக்தியை அதிகப்படுத்தி, டெல்டா வகை வைரஸுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் பீட்டா வகை வைரஸுக்கு எதிராகவும், பிரேசிலில் காணப்படும் வைரஸுக்கு எதிராகவும் சிறப்பாகச் செயல்படுகிறது.
உலகளவில் மக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் சிறப்பான செயல்திறன் ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் தடுப்பூசிக்கு இருக்கிறது. கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பையும், டெல்டா வகை வைரஸுக்கு எதிரான செயல்பாடு என இரு விதமான பாதுகாப்பையும் தடுப்பூசி வழங்குகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்தத் தடுப்பூசியை இந்த மாதத்தில் விற்பனைக்கு கொண்டுவருவது குறித்து மத்திய அரசிடம் ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது. இந்தியாவில் பயோலாஜிக்கல்-இ நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தியிலும், விற்பனையும் செயல்பட ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சிங்கிள் டோஸ் தடுப்பூசியான ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் தடுப்பூசி சந்தையில் விற்பனைக்கு வந்தால், ரூ.1,850 வரை(25டாலர்கள்)இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT