Published : 02 Jul 2021 07:23 AM
Last Updated : 02 Jul 2021 07:23 AM
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒவ்வொரு நாடும் குறைந்தபட்சம் தங்கள் மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் அறிவுறுத்தியுள்ளார்.
உலக அளவில் கரோனா வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பது தடுப்பூசி ஒன்று மட்டும்தான் என்று உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனால் ஒவ்வொரு நாடும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வளர்ந்த நாடுகளில் தடுப்பூசி எளிதாக மக்களுக்குக் கிடைத்து விடுகிறது, ஆனால் வளர்ந்து வரும் நாடுகள், ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பது பெரும் சிரமமாக இருந்து வருகிறது.
இதனால், ஏழை நாடுகளின் மக்களுக்காக தடுப்பூசி வழங்க கோவேக்ஸ் எனும் திட்டத்தை ஐ.நா. உருவாக்கியது. இந்தத் திட்டத்தில் வளர்ந்த நாடுகள் தங்களின் பங்களிப்பாக தடுப்பூசியை வழங்கிட வேண்டும், அதன் மூலம் அந்தத் தடுப்பூசி ஏழை நாடுகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்திலும் தற்போது மந்தநிலை நீடிக்கிறது.
இந்நிலையில் இந்திய சர்வதேச கூட்டமைப்பின் நிகழ்ச்சியி்ல் காணொலி வாயிலாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
உலகளவில் தடுப்பூசி செலுத்துவதிலும், கிடைப்பதிலும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. சில வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு அதிகமான பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் பல ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசிகள் இன்னும் கிடைக்கவே இல்லை. அங்குள்ள முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், முதியோர் உள்ளிட்ட எளிதில் பாதிப்புக்கு ஆளாகும் மக்களுக்குக்கூட தடுப்பூசி கிடைக்கவில்லை.
சில நாடுகள் இன்னும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது அந்த நாட்டுக்கு மட்டுமல்ல மற்ற நாடுகளுக்கும் அது ஆபத்தை ஏற்படுத்தும்.
ஆதலால், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒவ்வொரு நாடும் தங்கள் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி முடித்தால்தான் ஓரளவுக்கு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறந்த வழியாக அமையும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 40 சதவீத மக்களுக்கும், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் 70 சதவீதம் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிப்பதுதான் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும், உலகப் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு வரவும் இதுதான் சிறந்த வழி. ஒவ்வொரு இடத்திலும் கரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் வரை, எந்த இடத்திலும் நம்மால் தொற்றை ஒழிக்க முடியாது.
இவ்வாறு டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...