

பிரிட்டனில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு அதிகபட்சமாக ஒரே நாளில் 26,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ பிரிட்டனில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனில் 26 ஆயிரத்து 68 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் பலியாகியுள்ளனர். கரோன தடுப்பூசியை செலுத்தியதன் விளைவாக பலி எண்ணிக்கை குறைவாகி உள்ளது. என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டனில் இதுவரை 80 % பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 60% பேருக்கு இரண்டும் டோஸும் போடப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸ் காரணமாக பிரிட்டனில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு தளர்வுகள் அறிவிப்பதை அரசு தள்ளி வைத்துள்ளது.
2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. ஏற்கெனவே இருந்த கரோனா வைரஸ் தவிர்த்து, உலகில் புதிதாக உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் பி.1.1.7 வகை கரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் பி.1.351 வகை வைரஸ்கள், பிரேசிலில் பி.1. வகை வைரஸ்கள் பரவல் வேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்ற வைரஸ் தற்போது 96 நாடுகளில் பரவியுள்ளது.