Published : 01 Jul 2021 12:52 PM
Last Updated : 01 Jul 2021 12:52 PM
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின், உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் 96 நாடுகளுக்குப் பரவியுள்ளது என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் மாதங்களில் இந்த டெல்டா வைரஸ் அதிகமான நாடுகளுக்கு பரவுவதற்குவாய்ப்புள்ளது, உலகளவில் இந்த டெல்டா உருமாற்றம் அடைந்த வைரஸ் ஆதிக்கம் செலுத்தி அச்சுறுத்தக்கூடும் என உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.
உலக சுகதார அமைப்பு வாராந்திர தொற்றுநோய் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை உருமாற்ற வைரஸ் ஏறக்குறைய 100 நாடுகளுக்கு பரவிவிட்டது. இதுவரை 96 நாடுகளில் டெல்டா வகை உருமாற்றம் அடைந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த வைரஸை அடையாளம் காணத் தேவையான உருமாற்றம் குறைவாக இருப்பதால், இந்த வைரஸின் வரிசைப்படுத்தும் செயல்திறன் குறைத்து மதிப்பிடப்படுகிறது.
இந்த டெல்டா உருமாற்ற வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் தொற்று வேகமாகப் பரவுகிறது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகி்ச்சைப் பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த டெல்டா உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்ஃபா உருமாற்ற வைரஸைவிட 55 சதவீதம் தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
துனிசியா, மொசாம்பிக், உகாண்டா, நைஜிரியா, மலாவி உள்ளி்ட்ட 11 நாடுகளில் டெல்டா உருமாற்ற வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் பரவல் காரணமாக, புதிதாக பாதிக்கப்படுவோர், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
டெல்டா உருமாற்ற வைரஸ் வரும் மாதங்களில் மற்ற உருமாற்ற வைரஸ்களைவிட வீரியம் மிக்கதாக மாறக்கூடும், உலகளவில் அதிகமான நாடுகளில் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. அதாவது, குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் அளவு குறைவாக இருக்கும் நாடுகளில் நீண்டகாலத்துக்கு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தேவைப்படும். இந்த தடுப்பு நடவடிக்கைகள் குறிப்பிட்ட இலக்கு வைத்தும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள்ளும் செயல்படுத்தப்பட வேண்டும். இந்த தடுப்பு நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார உறுப்பு நாடுகளும் உதவ வேண்டும்.
ஆல்ஃபா உருமாற்ற வைரஸ் தற்போது 172 நாடுகளில் காணப்படுகிறது. பீட்டா வகை வைரஸ் 120 நாடுகளிலும், டெல்டா வகை உருமாற்ற வைரஸ் புதிதாக 11 நாடுகளிலும் என 96 நாடுகளில் காணப்படுகிறது.
கடந்த பல வாரங்களாக இந்தியாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயரவில்லை. கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தைவிட கடந்த வாரத்தில் 12 சதவீதம் பேர் மட்டுமே புதிதாக இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 3.51 லட்சம் பேர் மட்டுமே இந்தியாவில் புதிய தொற்று கண்டறியப்பட்டது.
ஆனால், பிரேசில்ல 5.21 லட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். ரஷ்யாவில் 1.34 லட்சம் பேரும், அர்ஜென்டினாவில் 1.31 லட்சம் பேரும், கொலிம்பியாவில் 2.04 லட்சம் பேரும் புதிதாக பாதிக்கப்பட்டனர்.
உயிரிழப்பைப் பொறுத்தவரை இந்தியாவில் கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 9,038 பேர் உயிரிழந்தனர். அதாவது ஒரு லட்சம் நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்தது கணக்கில் கொள்ளப்படும். இது அதற்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் 45 சதவீதம் குறைவாகும்.
இவ்வாறு அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT