Published : 23 Jun 2021 01:55 PM
Last Updated : 23 Jun 2021 01:55 PM

வருகிறது கியூபாவின் அப்தலா கரோனா தடுப்பூசி

அப்தலா தடுப்பூசி கரோனா வைரஸுக்கு எதிராக 92.28% பயனளிக்கிறது என்று கியூபா தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சோபேரானா தடுப்பூசி குறித்த அறிவிப்பை கியூபா வெளியிட்டது. இதில் மூன்று டோஸ்களைக் கொண்ட சோபேரானா தடுப்பூசி தனது இரண்டு டோஸ்களிலே கரோனா வைரஸுக்கு எதிராக 62% பலனளிக்கிறது என்று கியூபா தெரிவித்தது.

இந்த நிலையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றொரு தடுப்பூசியான அப்தலா தடுப்பூசி குறித்த விவரத்தை கியூபா வெளியிட்டுள்ளது. அப்தலா கரோனா தடுப்பூசி மூன்று டோஸ்களைக் கொண்டது. மூன்றாம் கட்டப் பரிசோதனையில் அப்தலா வைரஸ் கரோனா வைரஸுக்கு எதிராக 92.28% பலனளிக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கியூப அதிபர் மிகல் டையஸ் கேனல் கூறும்போது, “பின்லே இன்ஸ்டிடியூட், ஜெனிடிக் இன்ஜினீயரிங் மற்றும் பயோடெக்னாலஜி மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் பல தடைகளுக்கு இடையே இரண்டு பயனுள்ள கரோனா தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் இரண்டு தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வரவுள்ளன” என்று தெரிவித்தார்.

அர்ஜெண்டினா, மெக்சிகோ, வியட்நாம், வெனிசுலா ஆகிய நாடுகள் கியூபாவிடமிருந்து கரோனா தடுப்பூசிகள் வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளன.

கரோனாவுக்கு எதிராக அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த சில தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

அவற்றின் பெயர், பயன்படுத்தப்படும் நாடுகளின் விவரம்:

பைஸர் & பயோடெக்

பைஸர் கரோனா தடுப்பூசிகள் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அஸ்ட்ராஜெனகா (கோவிஷீல்டு)

உலக அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி இது. பிரிட்டன், மலேசியா, தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜான்சன் & ஜான்சன்

சிங்கிள் டோஸ் தடுப்பூசியான இது அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாடர்னா

கனாடா, டென்மார்க், பின்லாந்து, ஜப்பான், போர்ச்சுக்கல், தைவான் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

சினோபார்ம்

சீனா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இவை மட்டுமல்லாது ஸ்புட்னிக்-வி, கோவாக்சின், சினோவேக் போன்ற தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பின் பரிசீலனையில் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x