Published : 19 Jun 2021 03:10 PM
Last Updated : 19 Jun 2021 03:10 PM
மியான்மருக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக 119 நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியது.
“மியான்மருக்கு வழங்கப்படும் ஆயுத ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்றும், தேர்தல் முடிவுகளுக்கு மதிப்பளித்து சிறைப்பிடிக்கப்பட்ட தலைவர்களை விடுவிக்க வேண்டும்” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மியான்மருக்கான ஐ.நா. தூதர் கிறிஸ்டின் கூறும்போது, “மியான்மர் எதிர்கொண்டுள்ள சூழல் உள்நாட்டு விவகாரம் என்று சில நாடுகள் கூறுகின்றன. சிலர் இந்தத் தீர்மானம் உதவாது என்று கூறுகின்றனர். தம் மக்களுக்கு எதிராக வன்முறை செய்யும் ராணுவத்தின் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரெஸ் கூறும்போது, “ராணுவ சதித்திட்டங்கள் ஒரு விதிமுறையாக மாறும் உலகில் நாம் வாழ முடியாது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் மியான்மர் ராணுவம் ஆட்சியைக் கையில் எடுத்தது முதல் இதுவரை நடந்த போராட்டங்களில் 800க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.
மியான்மரில் ராணுவ வன்முறை
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், அண்மையில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மேலும், ஆங் சான் சூச்சி மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.
மியான்மர் நாட்டில் தற்போது அந்நாட்டு ராணுவம் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT