Published : 19 Jun 2021 11:55 AM
Last Updated : 19 Jun 2021 11:55 AM
ஈரானில் அதிபர் தேர்தல் வெள்ளிக்கிழமை முடிந்த நிலையில், இன்று முடிவுகள் வெளியாக உள்ளன.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் பதவிக் காலம் முடிந்த நிலையில், ஈரான் அதிபருக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது. எனினும், அதிபர் தேர்தலில் மக்கள் ஆர்வமில்லாமல் வாக்களித்ததன் காரணமாக குறைவான எண்ணிக்கையிலேயே வாக்குகள் பதிவாகின.
அதிபர் தேர்தலில் ஈரான் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் ரைசி, ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல் நாசர் ஹெமத்தி உள்ளிட்ட நால்வர் போட்டியிட்டனர். இதில் இப்ராஹிம் ரைசிக்கே வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று செய்தி வெளியாகியுள்ளது.
தேர்தல் குறித்து ஈரான் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கூறும்போது, “ஒவ்வொரு வாக்கும் முக்கியம். இது மக்களுக்கான நாள். நாம் ஒன்றுசேர்ந்து மக்களின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
யார் இந்த இப்ராஹிம் ரைசி?
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான இப்ராஹிம் ரைசி அரசியல் சார்ந்த அனுபவம் இல்லாதவர். ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் ஆதரவாளராக நீண்டகாலமாகச் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பெண்கள்
ஈரான் தேர்தலில் இம்முறை பெண்கள் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சுமார் 40 பெண்கள் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த நிலையில், அவர்களது வேட்பு மனுக்கள் நிராகரிப்பட்டன.
பொருளாதார நெருக்கடி
அணு ஆயுதக் கொள்கை காரணமாக, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் ஈரான் கடுமையான பொருளாதார நிலைக்குத் தள்ளப்பட்டது. இதன் காரணமாக இத்தேர்தலில் குறைவான எண்ணிக்கையிலேயே வாக்குப் பதிவு நடைபெற்றது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை 60%க்கும் குறைவான வாக்குகள் பதிவாகி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் தேர்தல் குறித்து தலைநகர் தெஹ்ரானில் வசிக்கும் கார் மெக்கானிக் ஒருவர் கூறும்போது, “ நான் அரசியல்வாதி கிடையாது. எனக்கு அரசியலைப் பற்றி எதுவும் தெரியாது. என்னிடம் பணம் இல்லை. இங்குள்ள அனைத்துக் குடும்பங்களின் நிலை இதுதான். இந்த நிலைமையை எங்களுக்கு ஏற்படுத்தியவர்களுக்கு நாங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT