Published : 15 Jun 2021 12:25 PM
Last Updated : 15 Jun 2021 12:25 PM
பிரிட்டனில் பரவிய உருமாறிய கரோனா வைரஸை விட டெல்டா வைரஸ், மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவதை இரட்டிப்பாக்குகிறது என்று ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் நிலவும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டெல்டா வைரஸ் பரவல் காரணமாக மேலும் நீட்டிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் இரண்டாவதாகக் கண்டறியப்பட்டதாக அறியப்படும் டெல்டா வைரஸ் பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த ஆல்ஃபா வைரஸைவிட மருத்துவமனையில் சேர்க்கும் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குகிறது.
இதுகுறித்து ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்டார்ச்லைட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
”ஸ்காட்லாந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 134 பேர் டெல்டா கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள். பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த ஆல்ஃபா வைரஸைவிட டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும் எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளது. தீவிரத் தன்மை உடையது.
எனினும் நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால் இதனைத் தடுக்கலாம். நீங்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸை எடுத்துக்கொண்டோ அல்லது ஒரு டோஸை எடுத்துக்கொண்டு 28 நாட்களைக் கடந்த பின்னர் கரோனாவால் பாதிக்கப்பட்டால் நீங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதைத் தடுப்பூசிகள் 70% தடுக்கின்றன. பைஸர் 79%, கோவிஷீல்ட் 60% டெல்டா வைரஸுக்கு எதிராக எதிர்ப்பாற்றலைத் தருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருமாறிய கரோனா வைரஸ்கள், கிரேக்க எழுத்துகளான ஆல்ஃபா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும்போது எளிதாக அடையாளப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து உருமாறிய கரோனா வைரஸ்களுக்குப் பெயரையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 17 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 38 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT