Published : 04 Jun 2021 12:16 PM
Last Updated : 04 Jun 2021 12:16 PM
கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் உருவானது தான் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா 10 ட்ரில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடுகொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவானதாகக் கருதப்படும் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனா வெகுவாக முயன்று போர்க்கால கட்டுப்பாடுகளுடன் போராடி வைரஸ் பாதிப்பை குறைத்துள்ள நிலையில் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஐரோப்பா உட்பட கிழக்கு ஆப்பிரிக்க நாட்டுக்கும் வைரஸ் பரவி பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப் இந்த வைரஸை ‘சைனீஸ் வைரஸ்’ என்று அப்போது வர்ணித்தார். இது கடும் சர்ச்சைக்குள்ளானது. உலகச் சுகாதார அமைப்பு சீனாவின் மோசடிகளை மறைத்து வருவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டினார். அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்துவதாக அறிவிப்பும் வெளியிட்டார்.
அமெரிக்க தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஃபாசிக்கும் சீனாவின் வூகான் லேபிற்கும் இடையே நடந்த 3,000 மின்னஞ்சல் பரிமாற்றங்கள் தொடர்பாக தொடர்பாக அமெரிக்க ஊடங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால் டாக்டர் பாசி வூகான் லேப் கரோனா கசிவு கோட்பாட்டை மறுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீண்டும் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இப்போது அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு முதன்முறையாக பழைய குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
சீனா வைரஸ் வூகான் ஆய்வகத்தில் வெளியே கசிந்தது என்று நான் கூறியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலர் என்னை கடுமையாக விமர்சித்தனர். அமெரிக்காவில் கூட எனது வாதத்திற்கு எதிர் வாதங்கள் வைக்கப்பட்டன. ஆனால் நான் கூறிய குற்றச்சாட்டு உண்மை தான் என்பதை நிருபிக்கும் ஆதாரங்கள் வந்த வண்ணம் உள்ளன.
பாசிக்கும் சீனாவுக்கும் இடையேயான பரிமாற்றங்களும் இதை உறுதி செய்கின்றன, இதைப் புறக்கணிக்க முடியாத அளவுக்கு ஆதாரங்கள் வெளி வருகின்றன. சீனாதான் காரணம் என்பதை தற்போது அனைவரும் உணரத் தொடங்கி விட்டனர்.
சீனா வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பலத்த சேதத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இதற்காக சீனா 10 ட்ரில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும். அமெரிக்கா மற்றும் கரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் நஷ்ட ஈடாக 10 ட்ரில்லியன் டாலர்கள் சீனா கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT