Published : 31 May 2021 12:35 PM
Last Updated : 31 May 2021 12:35 PM
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள் பல்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்தினர். இந்தப் பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
ஜெய்ர் போல்சனோரா கரோனா வைரஸ் விவகாரத்தைச் சரியாகக் கையாளவில்லை என்றும், அவரது அரசியல் அணுகுமுறை காரணமாக பிரேசிலில் லட்சக்கணக்கான மக்கள் கரோனாவுக்குத் தங்கள் உயிரை பலி கொடுத்துள்ளனர் என்றும் பிரேசில் சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும், சமீப மாதங்களாக பிரேசிலில் கரோனா தடுப்பூசி மிக மெதுவாகச் செலுத்தப்பட்டு வருகிறது எனவும், பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி இருப்பு இல்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா பதவி விலக வலியுறுத்தி பிரேசிலின் முக்கிய நகரங்ளில் சனிக்கிழமையன்று பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் போல்சனோரா பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
பேரணியில் பங்கேற்ற தொழிலதிபர் ஒருவர் கூறும்போது, “போதும்... நிச்சயம் இந்த அரசு இனியும் தொடரக் கூடாது. போல்சனோரா ஒரு கொலைகாரர். அவர் ஒரு சைக்கோ. அவருக்கு உணர்வுகள் இல்லை” என்றார்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸார் பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக பிரேசிலில் பல இடங்களில் பதற்றம் நிலவுகிறது.
சர்ச்சையில் சிக்கும் போல்சனோரா
பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சனாரோ பதவி ஏற்றது முதலே, ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல், முகக்கவசம் அணியாமல், மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஏற்கெனவே கூறிவந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
மேலும், கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டால் நீங்கள் முதலையாகவும் மாறலாம், பெண்களுக்கு தாடி வளரலாம் போன்ற கருத்துகளைப் பொதுவெளியில் பயன்படுத்தி வந்தார்.
உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் கரோனா காரணமாக பிரேசிலில் வறுமை அதிகரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT