Published : 28 May 2021 01:14 PM
Last Updated : 28 May 2021 01:14 PM
ஜப்பானியர்கள் உருவாக்கும் ‘மோஜி ரிங்கோ’ ஆப்பிள்கள் உலக அளவில் பிரபலமானவை. ஆப்பிள் மரங்கள் பூத்து, காய்கள் உருவாக ஆரம்பித்தவுடன் பிளாஸ்டிக் தாள்களைக் கொண்டு கட்டிவிடுவார்கள். ஆப்பிள்கள் பெரிதானவுடன் பிளாஸ்டிக் தாள்களை எடுத்துவிடுவார்கள். சூரிய ஒளி செல்லாமல், ஆப்பிள்கள் எல்லாம் வெள்ளையாகக் காட்சியளிக்கும். அந்த ஆப்பிள்களின் மீது மனிதர், விலங்கு, பறவை, பூக்கள் போன்ற உருவங்களும் வாழ்த்துச் செய்திகளும் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டுவார்கள்.
சில நாட்களில் வெள்ளை ஆப்பிள்கள் எல்லாம் சிவப்பாக மாற ஆரம்பிக்கும். முழுமையாக சிவந்த, முதிர்ச்சியடைந்த ஆப்பிள்களை அறுவடை செய்வார்கள். அந்த ஆப்பிள்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களைக் கவனமாக அகற்றுவார்கள்.
ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இடங்களில் மட்டும் சூரிய வெளிச்சம் படாமல், வெள்ளையாக இருக்கும். ரசாயனங்கள் எதுவும் இன்றி, சூரிய வெளிச்சத்தை மட்டுமே பயன்படுத்தி, மோஜி ரிங்கோ ஆப்பிள்கள் விளைவிக்கப்படுகின்றன.
பல நூற்றாண்டுகளாக மோஜி ரிங்கோ முறையில் ஆப்பிள்கள் ஜப்பானில் விளைவிக்கப்பட்டு வருகின்றன. முட்சு, ஸ்டார்க், ஜம்போ போன்ற பெரிய ஆப்பிள் வகைகளில்தான் உருவங்களைச் சிறப்பாகக் கொண்டுவர முடியும். ஜனவரி மாதம் ஆப்பிள் மரங்களில் வேலைகளை ஆரம்பிக்கிறார்கள். பூக்களுக்கு அதிக சூரிய ஒளி கிடைப்பதற்காக, அவற்றைச் சுற்றியுள்ள இலைகளை நீக்குகிறார்கள். பூக்களிலிருந்து பிஞ்சுவிட ஆரம்பித்தவுடனே பிளாஸ்டிக் தாள்கள் மூலம் பல தடவை சுற்றிக் கட்டுகிறார்கள்.
சூரிய ஒளியும் பூச்சிகளும் ஆப்பிள்களுக்குள் நுழைந்துவிட முடியாது. பழங்கள் பெரிதானவுடன் மோஜி ரிங்கோ பணிகள் ஆரம்பிக்கின்றன. பண்டிகைக் காலங்களுக்கு ஏற்ப வாழ்த்துகள், உருவங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டுகிறார்கள். சில நாட்களில் பழங்கள் சிவப்பாக மாறுகின்றன. அவற்றைப் பறித்து, ஸ்டிக்கர்களை நீக்கி, விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
மோஜி ரிங்கோ நுட்பத்தை மிகச் சிறப்பாகக் கையாள்பவர்கள் அமோரியும் அவரின் மகன் சிஸாடோ இவாஸாகியும்தான். ஆப்பிள் வடிவமைப்பில் மிகச் சிறந்த கலைஞர்களாக இருக்கிறார்கள்.
மோஜி ரிங்கோ ஆப்பிள்களை உருவாக்குவதற்குப் பொறுமை அவசியம். மற்ற ஆப்பிள்களை விளைவிப்பதைவிடக் கூடுதல் காலம் ஆகும். இவ்வளவு சிரமப்பட்டுக் கொண்டுவரும் மோஜி ரிங்கோ ஆப்பிள்கள் மூலம் பெரிய அளவில் லாபமும் கிடைப்பதில்லை. அதனால் பாரம்பரியம் மிக்க மோஜி ரிங்கோ ஆப்பிள்கள் மெதுவாக மறைய ஆரம்பித்துவிட்டன. வெகுசில விவசாயக் கலைஞர்கள் மட்டுமே கண்கவரும் மோஜி ரிங்கோ ஆப்பிள்களைத் தற்போது விளைவித்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT