Last Updated : 14 Dec, 2015 03:00 PM

 

Published : 14 Dec 2015 03:00 PM
Last Updated : 14 Dec 2015 03:00 PM

பிலிப்பைன்ஸை தாக்கும் பயங்கர ‘மெலர்’ சூறாவளி: 7 லட்சம் பேர் வெளியேற்றம்

மெலர் என்ற பயங்கர சூறாவளி பிலிப்பைன்ஸை தாக்கியது ஆழிப்பேரலைகள், கடும் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் என்ற எச்சரிக்கை காரணமாக மத்திய பிலிப்பைன்ஸிலிருந்து சுமார் 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.

வடக்கு முனையான சமர் என்ற விவசாயத் தீவில் இன்று அதிகாலை மெலார் புயல் கரையை மோதியது. மணிக்கு 185 கிமீ வேகத்தில் பயங்கர காற்று வீசியது. இங்குள்ள 1.5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு வானிலை ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

2013-ல் ஹையான் என்ற புயல் இதே சமர் பகுதியைத் தாக்கிய போது ராட்சத அலைகளுக்கு சுமார் 7,350 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

மெலர் என்ற இந்தப் புயல் கரையைத் தாக்கும் போது 13 அடி உயரத்துக்கு கடல் அலை எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், அதிகன மழை காரணமாக சுமார் 300 கிமீ சுற்றுப்பரப்பு பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

லூஸன் தீவுக்கு தென்கிழக்குப் பகுதியில் உள்ள அல்பே மாகாணத்தில் மட்டும் சுமார் 6 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏனெனில் கனமழை காரணமாக அருகில் உள்ள மேயோன் எரிமலைக்கு தாழ்வான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

உடனடியாக காலிசெய்யுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை மணி ஒலித்ததையடுத்து அல்பே மாகாணத்தின் லெகாஸ்பி நகரில் மக்கள் துணிமணிகள் நிரம்பிய பைகளுடனும், குடிநீர் பாட்டில்களுடனும் ராணுவ ட்ரக்குகளில் ஏற்றப்பட்டனர். இருப்பினும் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கும் போதே ராட்சத அலைகள் கடலில் எழும்பியது.

அல்பே மாகாணத்தில் 12 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர், புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடருக்கு தயார் படுத்திக் கொள்வதில் அல்பே மாகாண நிர்வாகம் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு ஹகுபிட் என்ற மிகப்பெரியச் சூறாவளி ஏற்பட்ட போது, ஒருவர் கூட இங்கு பலியாகாமல் காப்பாற்றப்பட்டனர், காரணம் முன்கூட்டியே மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அல்பே மாகாணத்துக்கு தெற்கில் உள்ள சர்சோகன் பகுதியிலிருந்து சுமார் 1,30,000 பேர் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

மெலர் என்ற இந்தப் பயங்கர சூறாவளி செவ்வாயன்று பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு தெற்கு சீன கடல் பகுதியை நோக்கி இந்தச் சூறாவளி செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூறாவளி கரையைக் கடப்பதற்கு முன்னரே அரசு 2 லட்சத்துக்கும் அதிகமான உணவுப்பொட்டலங்கள் மற்றும் பிற நிவாரண உதவிகளுடன் தயார் நிலையில் உள்ளது.

கடும் சூறாவளிப் பிரதேசமாக பிலிப்பைன்ஸ் இருந்து வருகிறது. இதனால் ஆண்டுக்கு 20 சூறாவளிகளாவது அந்நாட்டை தாக்கி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x