Published : 26 May 2021 05:34 PM
Last Updated : 26 May 2021 05:34 PM
இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் தரைமட்டமான கட்டிடங்களுக்கு இடையே தனது பிறந்த நாளைக் கொண்டாடிய காசா சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புகளுக்கிடையே ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த மோதலில் காசாவின் பல கட்டிடங்கள் சரிந்தன. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேறினார்கள். தற்போது இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் ராணுவத்துக்கும் இடையே போர் நிறுத்தம் நிலவுவதால் காசாவில் அமைதி நிலவுகிறது. எனினும் இயல்பு நிலை திரும்பவில்லை.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் தரைமட்டமான கட்டிடத்தின் நடுவே சிறுவன் ஒருவன் தனது நண்பர்கள் சூழப் பிறந்த நாளைக் கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை காலித் என்ற பேராசிரியர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தை முகமத் சனூன் என்பவர் எடுத்துள்ளார். (சிறுவனைப் பற்றிய விவரங்கள் ஏதும் அந்தப் புகைப்படத்தில் குறிப்பிடப்படவில்லை)
இப்படத்தைக் குறிப்பிட்டு காசாவில் மீண்டும் அமைதி நிலவ வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
நடந்தது என்ன?
இஸ்லாமியர்களும், யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதலை நடத்தின.
மே 10-ம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மற்றும் மேற்குக் கரை பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் 200க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT