Published : 18 Dec 2015 12:59 PM
Last Updated : 18 Dec 2015 12:59 PM
உள்நாட்டு போர், தீவிரவாதம் உள்ளிட்ட காரணங்களினால் தங்கள் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோர் மற்றும் அகதிகளாக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியுள்ளதாக ஐநா தகவலொன்று தெரிவிக்கிறது.
ஐநா அகதிகள் ஆணைய அறிக்கை இதனை தெரிவித்துள்ளது, இதில் 2.2 கோடிக்கும் அதிகமானோர் போர்கள் மற்றும் அடக்குமுறை காரணமாக அகதிகளாக்கப்பட்டவர்கள்.
இதில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்காவிடம் புகலிடம் கோரி விண்ணப்பித்து நிலுவையில் உள்ளது.
“முதல் முறையாக வலுக்கட்டாய உலக அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியுள்ளது. 122 பேர்களில் ஒருவர் என்ற விகிதத்தில் தங்கள் வீடு, உடமை, நாடுகளை இழந்து வெளியேறியுள்ளனர்.
சுமார் 3.4 கோடி மக்கள் உள்நாட்டு அகதிகளாகியுள்ளனர். இது 2014-ம் ஆண்டின் எண்ணிக்கையை காட்டிலும் 20 லட்சம் அதிகமாகியுள்ளது. மார்ச் மாதம் சிவில் யுத்தம் மூண்ட ஏமன் நாடு இதில் முதலிடம் வகிக்கிறது. இந்த நாட்டிலிருந்து மட்டும் 933,500 பேர் அகதிகளாகியுள்ளனர்.
அனைத்தையும் இழந்து தவிப்போர் மீது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சகிப்புத் தன்மை, தயை குணம், ஒற்றுமையைக் கோருகிறது இந்தத் தகவல்கள்.
வளரும் நாடுகளின் சண்டைப் பகுதிகள் அகதிகள் உருவாக்கத்தில் கணிசமான பங்களிப்பு செய்து வருகிறது. அக்டோபரில் சிரியா, மியான்மர், இராக், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோர் வரத்து அதிகமான காலக்கட்டத்துக்கு முந்தைய கணக்கெடுப்பாகும் இது என்பதும் கவனிக்கத்தக்கது.
2011-ம் ஆண்டு தொடங்கிய சிரியா நாட்டு சிவில் யுத்தம் பெரிய அளவில் புலம்பெயர்வை தூண்டியுள்ளது. நடப்பு ஆண்டின் முதல் பாதி வரை 42 லட்சம் சிரியா நாட்டு அகதிகள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர், சுமார் 76 லட்சம் பேர் அந்த நாட்டிலேயே உள்நாட்டு அகதிகளாகியுள்ளனர்.
ஆப்கான், சோமாலியா, தெற்கு சூடான் வன்முறையும் அகதிகள் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்து வருகிறது. இதில் பாதுகாப்பாக மீண்டும் நாடு திரும்புவோர் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் பாதி வரை 84,000 மட்டுமே.
வரும் ஆண்டுகளிலும் பல அகதிகள் தங்கள் நாடுகளை விட்டு வெளியில் வாழும் நிலையே தொடரும். சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் இன்று நாம் அகதிகளாகிவிட்டால் மீண்டும் தாயகம் திரும்புவது என்பதற்கு 30 ஆண்டுகள் பிடிக்கும் என்று இந்த அறிக்கை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT