Last Updated : 24 May, 2021 02:51 PM

 

Published : 24 May 2021 02:51 PM
Last Updated : 24 May 2021 02:51 PM

ஒரு நிமிடத்தில் கரோனா பரிசோதனை முடிவு: இந்தியப் பேராசிரியர் அடங்கிய குழு கண்டறிந்த புதிய கருவிக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி

மூச்சுக் காற்று மூலம் கரோனாவைக் கண்டறியும் கருவி | படம் உதவி: ட்விட்டர்.

சிங்கப்பூர்

மூச்சுக் காற்று மூலம் ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறியும் கருவிக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கருவிக்கு ‘பிரீபென்ஸ் கோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள், இந்தியப் பேராசிரியர் அடங்கிய குழு கண்டுபிடித்த இந்தக் கருவி மூலம் ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்பதை ஒரு நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க முடியும்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக்தைச் சேர்ந்த இந்தியப் பேராசிரியர் டி வெங்கி வெங்கடேசன், அவரின் மாணவர்கள் டாக்டர் ஜியா ஹூனன், டு ஃபாங், வேனே வீ ஆகியோர் இந்த பிரீத்தா நிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிறுவனத்துக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆதரவு அளிக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள், ஸ்டார்ட் அப்களுக்குத் தேவையான ஊக்கத்தையும் நிதியுதவியையும் வழங்குகிறது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ப்ரீத்தா நிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது என சேனல் நியூஸ் ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது.

படம் உதவி: யூடியூப்

இந்தத் தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் சுகாதாரத் துறையுடன் இணைந்து ப்ரீத்தா நிக்ஸ் நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது. சிங்கப்பூருக்குள் வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இந்த ‘ப்ரீபென்ஸ் கோ’ கரோனா மூச்சுப் பரிசோதனைக் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்குள் நுழையும் பிற நாட்டவருக்குக் கண்டிப்பாக ஆன்டி ரேபிட் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு சேர்த்து இந்த ப்ரீபென்ஸ் கோ பரிசோதனையும் நடத்தப்படும்.

தற்போது நடைமுறையில் இருக்கும் ஆன்டி ரேபிட் டெஸ்ட் கருவியில் கரோனா பரிசோதனை செய்தால் 30 நிமிடங்களுக்குள் முடிவு கிடைக்கும். ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் சில மணி நேரங்களில் முடிவு கிடைக்கும்.

ஆனால், ப்ரீபென்ஸ் கோ கோவிட் பரிசோதனைக் கருவி மூலம் ஒருவரின் மூச்சுக் காற்றைச் செலுத்தி பரிசோதனை செய்தால், ஒரு நிமிடத்துக்குள் முடிவு கிடைத்துவிடும். இந்த ஸ்பெக்டோமீட்டர் ஒருவரின் மூச்சுக் காற்றைப் பரிசோதித்து அந்தக் காற்றில் தீங்கு விளைவிக்கும் நுண்கிருமிகள் இருக்கிறதா எனக் கண்டறிந்து சில வினாடிகளில் முடிவைக் கூறிவிடும். இந்தக் கருவியில் பாசிட்டிவ் வந்துவிட்டால் கண்டிப்பாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

இந்தக் கருவியில் இருக்கும் சிறிய குழாயைப் பரிசோதனைக்கு உட்படுபவர் வாயில் வைத்து மூச்சுக் காற்றை அழுத்தமாகச் செலுத்த வேண்டும். அவரின் மூச்சுக் காற்று இந்தக் கருவியில் சேமிக்கப்பட்டு, ஸ்பெக்டோமீட்டர் அடுத்த சில வினாடிகளில் மூச்சுக் காற்றில் கரோனா வைரஸ் கிருமி இருக்கிறதா அதாவது பாசிட்டிவா அல்லது நெகட்டிவா என்பதைக் கூறிவிடும்.

படம் உதவி: ட்விட்டர்

ப்ரீத்தா நிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மருத்துவர் ஜியா கூறுகையில், “நம்முடைய மூச்சுப் பரிசோதனை எந்தவிதமான இடையூறும் இல்லாதது. நாங்கள் வழங்கும் சிறிய குழாயை வாய்க்குள் வைத்தோ அல்லது நாசியில் வைத்தோ அழுத்தமாக மூச்சைச் செலுத்தினால் போதும். எந்தவிதமான அசவுகரியக் குறையும் இருக்காது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி குழாய் பயன்படுத்தப்படும். எச்சில் கருவிக்குள் செல்லாமல் தடுக்கும் பகுதியும் இருக்கிறது.

இந்தக் கருவியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021 ஏப்ரல் வரை, சாங்கி விமான நிலையம், தேசிய தொற்றுநோய் தடுப்பு மையம், துபாய் விமான நிலையம் என 3 இடங்களில் பரிசோதனை செய்தோம். இதில் வெற்றிகரமான முடிவுகள் கிடைத்தன” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x