Published : 19 May 2021 05:42 PM
Last Updated : 19 May 2021 05:42 PM
இந்தியாவில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் B.1.617 உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு எதிராக பைஸர், மாடர்னா தடுப்பூசிகள் சிறப்பாகச் செயல்படுவதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை NYU Grossman School of Medicine என்ற மருத்துவ மையம் நடத்தியுள்ளது.
அந்த ஆய்வில் , “புதியவகை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்கள் வேகமாக பரவக்கூடியவை என்றாலும், தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் பாதிக்கப்படாமல் தவிர்க்கலாம். இந்தியாவில் கண்டறியப்பட்டதாக அறியப்படும் B.1.617 அல்லது B.1.618 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ்களுக்கு எதிராக பைஸர், மாடர்னா தடுப்பூசிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. இந்தத் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் நோய்க் கிருமிகள் உட்செல்வதைத் தடுக்கின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
B.1.617 உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
முன்னதாக, சுமார் 8 கோடி கரோனா தடுப்பூசிகள் உலக நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அமெரிக்கா அளிக்கும் 8 கோடி தடுப்பூசிகளில் அஸ்ட்ராஜெனிகா, பைஸர், மாடர்னா ஆகிய தடுப்பூசிகள் அடங்கும்.
தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.
இந்த நிலையில் கரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT