Published : 15 Dec 2015 03:35 PM
Last Updated : 15 Dec 2015 03:35 PM
பயங்கரவாதத்தை ஒழிக்க சவுதி அரேபியா தலைமையில் இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பில் பாகிஸ்தான் உள்ளிட்ட 34 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஏமனில் சன்னி பிரிவு முஸ்லிகளுக்கு ஆதரவாக ஷியா பிரிவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா கடந்த மார்ச் மாதம் முதல் வான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பல மாதங்களாக அரசியல் நிலையற்ற சூழல் உருவாகியுள்ளது. ஏமன் அரசை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களது வசம் வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஏமன் ரியாத்தை தலைமையகமாக கொண்டு பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டுத் தாக்குதல் நடத்த, 'இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு' ஏற்படுத்த 34 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த கூட்டமைப்பு சவுதி அரேபியா தலைமையில் பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட இந்த நாடுகள் அனைத்தும் முடிவு செய்துள்ளன. ரியாத்தை தலைமையமாக கொண்டு செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக இந்நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும் என்று சவுதி அரேபிய அரசு பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டமைப்பில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஆப்பிரிக்க நாடுகளான மாலி, சாட், சோமாலியா மற்றும் நைஜிரியா மற்றும் போர் சூழலில் இருக்கும் லிபியா, ஏமன் போன்ற நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
சவுதி துணை இளவரசர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் முகமது பின் சல்மான் இது குறித்து பேசும்போது, "புதிய இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு, பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும். மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் மற்றும் சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஒழிக்க, சர்வதேச சமூகத்துக்கு தனது ஆதரவை அளிக்கும். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு இஸ்லாமிய நாடும் தனித்தனியாக பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடுகின்றன. இந்தச் சூழலில் இந்தக் கூட்டணி மிகவும் அவசியமானது." என்று கூறினார்.
இந்த கூட்டமைப்பில் சவுதி அரேபியாவுக்கு எதிரான ஈரான் இடம்பெறவில்லை.
சிரியா மற்றும் இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நடத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா கூட்டுப் படை தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT