Published : 18 May 2021 07:53 PM
Last Updated : 18 May 2021 07:53 PM

இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி; காசாவிலிருந்து 52,000 பாலஸ்தீனர்கள் வெளியேறினர்: ஐ. நா.

இஸ்ரேல் தாக்குதல் காரணமாக சுமார் 52,000 பாலஸ்தீனியர்கள் காசாவிலிருந்து வெளியேறி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ. நா. வெளியிட்ட அறிக்கையில், “ காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ராணுவத் தாக்குதல் காரணமாக காசாவில் அமைந்துள்ள 450 கட்டிங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக சுமார் 52,000 மக்கள் காசாவிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பகுதிகளில் மருத்துவமனைகளும் அடக்கம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

நடந்தது என்ன?

1967இல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரமாக இருக்கும் என்று அந்நாடு அப்போது அறிவித்தது. இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. ஆனால், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதையடுத்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்து வருகிறது.

பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது.

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக யாஹ்யா அல் சின்வார் 2017இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலஸ்தீனப் போராளிகளுக்கு எதிராக சந்தேகத்துக்கு இடமான நபர்களைக் கொன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் 2011ஆம் ஆண்டு இஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்றத்தில் யாஹ்யா அல் சின்வார் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x