Published : 18 May 2021 12:52 PM
Last Updated : 18 May 2021 12:52 PM

8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அளிக்கும் அமெரிக்கா

தங்கள்வசம் உள்ள 8 கோடி கரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, “ புதிய வகை வைரஸ் உருமாற்றங்கள் வெளிநாடுகளில் எழக்கூடும், அவை எங்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும், மேலும் உலகெங்கிலும் நோயை எதிர்த்துப் போராட நாங்கள் உதவ வேண்டும், இது நிச்சயம் செய்ய வேண்டிய விஷயம். எனவே 8 கோடி கரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்குப் பகிர்தளிக்க இருக்கிறோம்” என்றார்.

மேலும், அமெரிக்காவில் 50 மாகாணங்களில் கரோனா தடுப்பூசிகள் சிறப்பாக போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அதற்கான விலையைக் கொடுப்பார்கள் என்றும் பைடன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசிகள் செலுத்திய பிறகு பல்வேறு மாகாணங்களில் கரோனா தொற்று குறைந்துள்ளது. பலியும் குறைந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,030 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 369 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்கா அளிக்கும் 8 கோடி தடுப்பூசிகளில் அஸ்ட்ராஜெனிகா, பைஸர், மாடர்னா ஆகிய தடுப்பூசிகள் அடங்கும்.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது.

வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x