Published : 17 May 2021 10:36 AM
Last Updated : 17 May 2021 10:36 AM
2020ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) மெக்சிகோ நாட்டின் ஆண்ட்ரியா மெஸா தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பின் மெக்சிகோவைச் சேர்ந்த பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியப் பெண் அட்லின் கேஸ்டிலினோ 4-வது இடத்தைப் பெற்றார்.
69-வது ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி ப்ளோரிடாவில் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஹோட்டல் அண்ட் கேஸினோவில் நடந்தது. கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மிகுந்த பாதுகாப்புடன் பிரபஞ்ச அழகிப் போட்டி நடந்தது.
74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில் மெக்சிகோ நாட்டின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் (28) இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இதில் பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸா அறிவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகி தென் ஆப்பிரிக்காவின் ஜோஜிபினி டுன்ஸி, பிரபஞ்ச அழகிக்கான தேர்வை அறிவித்தவுடன் ஆண்ட்ரியா மெஸா மகிழ்ச்சியில் உற்சாகக் குரலிட்டு, கண்ணீர் விட்டார். மெஸாவுக்கு பிரபஞ்ச அழகி மகுடத்தை ஜோஜிபினி டுன்ஸி சூட்டினார்.
2-வது இடம் பிரேசில் நாட்டுப் பெண் ஜூலியா காமாவுக்குக் கிடைத்தது, பெரு நாட்டைச் சேர்ந்த ஜானிக் மெக்டா (27) 3-வது இடத்தைப் பெற்றார்.
முன்னாள் பிரபஞ்ச அழகிகள் செஷ்லி கிறிஸ்ட், பவுலினா வேகா, டெமி லீ டெபோ ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்தார்.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெண்கள் 3-வது முறையாக பிரபஞ்ச அழகிப் பட்டத்தைத் கைப்பற்றியுள்ளனர். இதற்கு முன் கடந்த 2010இல் ஜிமினா நவரெட்டேவும், கடந்த 1991இல் லுபிடா ஜோன்ஸும் கைப்பற்றினர். ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மெக்சிகோவைச் சேர்ந்த பெண் பிரபஞ்ச அழகியாக முடிசூடப்பட்டார்.
நிகழ்ச்சிகளை ஹாலிவுட்டைச் சேர்ந்த நடிகர்கள் மரியா லோபஸ், ஒலிவியா கல்போ ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT