Published : 15 May 2021 08:34 AM
Last Updated : 15 May 2021 08:34 AM
இந்தியாவில் கரோனா வைரஸ் சூழல் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது, மக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருவதும், உயிரிழப்பதும் வேதனையளிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களை பாடாய்படுத்தி வருகிறது. நாள்தோறும் 3.5 லட்சத்துக்கும் குறைவில்லாமல் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் ஒரு கோடி பேர் கரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில் அடுத்த 6 மாதத்துக்குள் மீண்டும் ஒரு கோடிபேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நிலவும் சூழலைப் பார்த்து உலக நாடுகள் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள், பிபிஇ ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு விதமான மருத்துவ உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து மிகுந்த கவலையளிக்கும் விதத்தில் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மக்கள் கரோனாவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும், அங்கு உயிரிழப்பும் தொடர்ந்துவருவது வேதனையளி்க்கிறது.
உலகிற்கு நாங்கள் சொல்வதெல்லாம், கரோனா வைரஸ் முதல் அலையைவிட 2-வது அலை மிகவும் மோசமான உயிர்கொல்லியாக இருக்கும் என்று எச்சரிக்கிறோம்.
இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பால் செய்ய முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். ஆக்சிஜன் செறிவூக்கிகள், தேவையான இடங்களில் மொபைல் மருத்துவமனை அமைக்க டென்ட்கள், முகக்கவசம், மருந்துகளை அனுப்பி வருகிறோம். இந்தியாவுக்கு உதவி வரும் பல்வேறு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு நன்றி தெரிவிக்கிறது. அவசரநிலை போன்ற நடவடிக்கைகள், சூழல் இந்தியாவில் மட்டும் கட்டுப்படவில்லை.
நேபாளம், இலங்கை, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, எகிப்து ஆகிய நாடுகளிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அமெரிக்க கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் இன்னும் கரோனா பாதிப்பு தொடர்ந்து வருகிறது. ஆப்பிரிக்க கண்டத்திலும் சில நாடுகளில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, அங்கும் தொடர்ந்து தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம்.
இவ்வாறு டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT