Published : 12 May 2021 07:06 PM
Last Updated : 12 May 2021 07:06 PM

அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை உலகத் தலைவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்: கால்பந்து வீரர் முகமது சாலா வலியுறுத்தல்

அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை உலக நாடுகளின் தலைவர்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரபல கால்பந்து வீரர் முகமது சாலா அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே வன்முறை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முகமது சாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “வன்முறை காரணமாக அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை உலகத் தலைவர்கள் உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். நான்கு வருடமாக எனது இல்லமாக மாறியுள்ள நாட்டின் பிரதமரையும் (பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்) கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சாலா இந்தப் பதிவில் இஸ்ரேல்- பாலஸ்தீனப் பெயரை உபயோகிக்காமல் தனது கருத்தைத் தெரிவித்துள்ளதை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

எகிப்தைச் சேர்ந்த முகமது சாலா, சர்வதேச அளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரர். இவர் பிரபல லீவர்புல் கிளப் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார்.

நடந்தது என்ன?

பாலஸ்தீனர்கள் ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா மசூதியில் ரம்ஜானை முன்னிட்டு மே 8-ம் தேதி இரவில் தொழுகையில் ஈடுபட்டனர். சுமார் 90,000 பாலஸ்தீனர்கள் அப்பகுதியில் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் போலீஸார் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில், பாலஸ்தீனத்தில் 35 பேரும், இஸ்ரேலில் 5 பேரும் பலியாகினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x