Last Updated : 10 May, 2021 11:26 AM

1  

Published : 10 May 2021 11:26 AM
Last Updated : 10 May 2021 11:26 AM

இந்திய மக்கள் கரோனா வைரஸிலிருந்து தப்பிக்க தடுப்பூசி செலுத்துவதுதான் நீண்டகாலத் தீர்வு: அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அறிவுரை

அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி | படம் உதவி ட்விட்டர்

வாஷிங்டன்


இந்தியாவில் நிலவும் கரோனா பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு என்பது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான், அதற்கு தடுப்பூசி தயாரிப்பை உள்நாட்டளவிலும் அதிகப்படுத்த வேண்டும், வெளிநாடுகளில் இருந்தும் வாங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

அதில் குறிப்பாக “ அடுத்த சில வாரங்களுக்கு நாடுமுழுவதும் லாக்டவுன் கொண்டு வர வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும். ராணுவத்தை களத்தில் இறக்கி தற்காலிகமான மருத்துவனைகளை அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏபிசி சேனலுக்கு அந்தோனி ஃபாஸி நேற்று பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான் தீர்வு. உலகிலேயே அதிகமான தடுப்பூசி தயாரிக்கும் நாடு இந்தியாதான். இந்தியாவில் ஏராளமான வளங்கள் இருக்கின்றன, அதை வைத்து தயாரிக்க வேண்டும். உள்நாட்டளவில் மட்டும் தடுப்பூசி தயாரிக்க முடியாவிட்டால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தலாம்.

இந்தியா விரைவாக தொற்றிலிருந்து மீள வேண்டும் என்ற அவசியம் காரணமாகவே மற்ற நாடுகள் தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்து வருகின்றன. தடுப்பூசி தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி, லட்சக்கணக்கான டோஸ் மருந்துகளை இந்தியாவுக்கு வழங்கலாம்.

அதுமட்டுமல்லாமல், நான் ஏற்கெனவே கூறியபடி, இந்தியாவில் இந்த நேரத்தில் ராணுவத்தை களத்தில் இறக்கி, சீனா உருவாக்கியது போன்று தற்காலிகமான மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும்.

இதுபோன்ற தற்காலிகமான மருத்துவமனைகள் அமைத்தால் மக்களை தெருக்களில் அமர வைத்து சிகிச்சை அளிக்கத் தேவையிருக்காது, மருத்துவமனைகளில் படுக்கை இல்லை என்ற குறைபாடு இருக்காது. ஆக்சிஜன் சப்ளை மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது.

கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் இல்லாவிட்டால், மிகவும் கொடுமையானது. அதுதான் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியாவுக்கு தற்போது உடனடியாக படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல், போதுமான அளவு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன், பிபிஇ ஆடைகள், மருந்துகள் உள்ளிட்டவை அவசியம்.

இவ்வாறு அந்தோனி ஃபாஸி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x