Published : 04 May 2021 02:49 PM
Last Updated : 04 May 2021 02:49 PM
இந்தியாவில் தற்போதுள்ள கரோனா வைரஸ் சூழல் மிகவும் வேதனையாகவும், நம்பிக்கையற்ற நிலையையும் காட்டுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உடனடியாக லாக்டவுனை நடைமுறைப்படுத்துங்கள். ராணுவம் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் பயன்படுத்துங்கள் என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து 3.5 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது. உயிரிழப்பு 2.20 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஆனால், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி 4 லட்சமாக பாதிப்பு இருந்த நிலையில், தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, மருந்துகள் ஆகியவற்றைச் சமாளிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டி உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
''இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் பரவலால் நிலவும் சூழலைப் பார்க்கும்போது வேதனையாகவும், நம்பிக்கையற்றும் இருக்கிறது. மிக மிகக் கடினமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்வதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அதனால்தான் நாங்கள் மிகுந்த வேதனைப்பட்டு, எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம்.
இந்தியாவில் கரோனாவில் ஏற்பட்ட சூழலைச் சமாளிக்க உடனடியாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அவசியம். இந்த ஊரடங்கு மக்களை முடக்கிவைக்கும் வகையில் 6 மாதங்கள் தேவையில்லை. சில வாரங்கள் போதுமானது. கரோனா வைரஸால் ஏற்பட்ட சமூகப் பரவல் சங்கிலியை உடைக்கத் தற்போதுள்ள ஒரே வழி லாக்டவுன் மட்டும்தான்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அழுத்தம், சூழல், சிக்கல்கள் ஆகியவற்றைப் பார்த்துதான் உலக நாடுகள் உதவி வருகின்றன. அமெரிக்காவும் உதவுகிறது. இந்தியாவுக்குத் தற்போது கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பொருட்கள் தேவை. அதைத்தான் பல நாடுகள் வழங்குகின்றன. சில நாடுகள் மருத்துவ வல்லுநர்களைக் கூட அனுப்பியுள்ளது.
ஏராளமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். இரு தடுப்பூசிகளும் இந்தியர்களுக்காகவே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம்.
அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து மட்டுமல்லாமல் எந்தெந்த நாடுகளில் எந்தெந்த மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி தருவதற்குத் தயாராக இருக்கிறார்களோ அவர்களிடம் இருந்து இறக்குமதி செய்யலாம்.
சிலர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டும் இன்றைய பிரச்சினை தீர்ந்துவிடாது. இப்போதிருந்து பல வாரங்களுக்குப் பிரச்சினைகளில் இருந்து தடுக்கும். அதிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்பது நாடு முழுவதும் மருத்துவமனைகளில் நிரம்பி வழியிலும் கரோனா நோயாளிகளை எவ்வாறு கவனிக்கப் போகிறோம், சிகிச்சை அளிக்கப்போகிறோம் என்பதுதான். கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், மருந்துகள் அடிப்படையில் அத்தியாவசியமானவை.
இந்தியாவில் இப்போது நிலவும் சூழல் மிகவும் தீவிரமானது, ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. ஏராளமான மக்கள் தொடர்ந்து கரோனாவில் பாதிக்கப்பட்டால், ஒவ்வொருவரையும் கவனமாகப் பார்த்துக்கொள்ளப் போதுமான மருத்துவப் பணியாளர்கள் இல்லை.
மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, சப்ளையில் பிரச்சினை எனச் சூழலை இவை மேலும் மோசமாக்குகின்றன. இதனால்தான் இந்தியாவின் சூழலைப் பார்த்து உலக நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டி உதவிகளை வழங்குகின்றன.
இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் இந்தியா தனது அனைத்து வளங்களையும், ராணுவம் உட்பட அனைத்தையும் பயன்படுத்த வேண்டும். ராணுவத்தைப் பயன்படுத்தி தற்காலிகமாக மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும்.
சீனாவில் நடந்ததைச் சற்று பின்னோக்கிப் பாருங்கள். சீனாவில் மிக மோசமான சூழல் நிலவியபோது, அங்கு தற்காலிகமான மருத்துவமனைகளை மிக மிக விரைவாக எழுப்பினர். தேவையான மருத்துவ வசதிகளை அளித்து அனைத்து மக்களுக்கும் சிகிச்சை அளிக்க முடிந்தது.
ஆதலால், இந்தியா தனது ராணுவத்தை இதில் களமிறக்கி தற்காலிகமான மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும். போர்க்காலச் சூழலில் எவ்வாறு செயல்படுவோமோ அவ்வாறு பணியாற்ற வேண்டும். கரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு மருத்துவமனையில் படுக்கை இருக்க வேண்டும். மருத்துவமனையும் இருக்க வேண்டும். ஆதலால், இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில வாரங்களுக்கு நாடு முழுவதும் லாக்டவுன் அவசியம்''.
இவ்வாறு ஆண்டனி ஃபாஸி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT