Published : 27 Apr 2021 09:56 AM
Last Updated : 27 Apr 2021 09:56 AM

இந்தியாவின் கரோனா தொற்று நிலவரம் இதயத்தை நொறுக்குகிறது: உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேதனை

இந்தியாவின் கரோனா தொற்று நிலவரம் இதயத்தை நொறுக்குகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசுஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அன்றாட கரோனா பாதிப்பு தொடர்ந்து 3.5 லட்சத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காகவும், அத்தியாவசிய மருந்துகளுக்காகவும் மக்கள் இடும் கூக்குரல் உலகமே எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் நிலவரம் இதயத்தை நொறுக்குவதைத் தாண்டியும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

"இந்தியாவின் அண்மைக்காலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மருந்து, மருத்துவ உபகரணங்கள் வேண்டி சமூகவலைதளங்களில் மன்றாடுவதும் வேதனையளிக்கிறது.

உலக சுகாதார அமைப்பு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அவசர கால தேவைக்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்களை அனுப்பிவைக்கிறது. இதுவரை ஐ.நா.வின் போலியோ ஒழிப்பு, காசநோய் ஒழிப்புத் திட்டங்களில் பணியாற்றிவந்த நிபுணர்களை இந்தியாவிற்கு உதவியாக அனுப்பியுள்ளது.

கடந்த 9 வாரங்களாகவே தொடர்ந்து உலகளவில் பல இடங்களிலும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் மட்டும் உலகளவில் ஏற்பட்ட பாதிப்பானது கடந்த 5 மாதங்களில் ஒட்டுமொத்த உலகமும் சந்தித்த பாதிப்புக்கு இணையானது.
அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து பிரேசில், மெக்சிகோ இருக்கின்றன. நான்காவது இடத்தில் உள்ள இந்தியா அண்மைக்காலமாக அதிக தொற்றாளர்களைக் கண்டுவருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும், பிரிட்டனும் வெண்டிலேட்டர்கள், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளது. பிரான்ஸ் உள்ளிட்ட இன்னும் பல நாடுகளும் உதவ முன்வந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x