Published : 24 Apr 2021 06:43 PM
Last Updated : 24 Apr 2021 06:43 PM
இந்தியர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் துணை நிற்கும். உலகத்துக்கே சவாலாக இருக்கும். கரோனா வைரஸை எதிர்த்து மனித சமுதாயம் ஒன்றாக இணைந்து போரிட வேண்டும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 3.46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் நாள்தோறும் உயிரிழந்து வருகின்றனர். இது தவிர ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பு மருந்து பற்றாக்குறையும் நிலவுகிறது.
கரோனா வைரஸ் 2-வது அலையில் இந்தியா சிக்கி திணறுவதைப் பார்த்து சீனா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் உதவ முன்வந்த நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானும இக்கட்டான இந்த நேரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம் என ஆதரவு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்த உலகத்திலும், அண்டை நாட்டிலும் கரோனா வைரஸால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அவர்கள் விரைந்து குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்வோம்.
இந்த கரோனா வைரஸுக்கு எதிரான ஆபத்தான போரில் ஈடுபட்டுள்ள, இந்தக் கடினமான நேரத்தில் இந்திய மக்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். உலக அளவில் சவாலாக இருந்துவரும் இந்த கரோனா வைரஸுக்கு எதிராக மனித சமுதாயம் ஒன்றாக இணைந்து போரிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு எங்களின் ஆதரவைத் தெரிவிக்கிறோம்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பில் இதயத்திலிருந்து ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். கரோனா வைரஸ் பரவலை எதிர்க்க சார்க் நாடுகளுடன் சேர்ந்து பாகிஸ்தான் தொடர்ந்து பணியாற்றும்” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்தக் கடினமான நேரத்தில் நாங்கள் இந்திய மக்களுக்காகப் பிரார்த்திக்கிறோம். இந்தக் கடினமான நேரத்திலிருந்து இந்தியர்கள் விரைவில் விடுபட கடவுள் கருணை காட்ட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலும் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து வருகிறது என்றாலும் இந்தியா அளவுக்கு இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 5,908 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 157 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT