Last Updated : 30 Dec, 2015 12:07 PM

 

Published : 30 Dec 2015 12:07 PM
Last Updated : 30 Dec 2015 12:07 PM

பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ். தீவிரவாதி கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். தீவிரவாதி கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன் அறிவித்துள்ளது.

பாரீஸ் தாக்குதலை சிரியாவில் இருந்துக்கொண்டு செயல்படுத்திய ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கிய நபர் கொல்லப்பட்டார். சிரியாவில் இந்த மாதத்தில் அமெரிக்கா பலமுறை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதி சரப்பே அல் மவுவதன் கொல்லப்பட்டார் என்று பென்டகன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரீஸ் தாக்குதலுக்கு திட்டமிட்டு தந்த அப்துல் ஹமீது அபாவுத்தின் நெருங்கிய தொடர்பில் சரப்பே அல் மவுவதன் இருந்ததாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட் சரப்பே அல் மவுவதன் பல்வேறு மேற்கத்திய நாடுகளில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியது சமீபத்தில் அம்பலமானது. மேலும், தொடர் வான்வழித் தாக்குதலின் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பில் இருந்த ரமாதி நகரம் கைப்பற்றப்பட்டதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நவம்பர் மாதம் இசை அரங்கம், கால்பந்து மைதானம், ஓட்டல்கள் என 6 இடங்களில் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 125க்கும் அதிகமானோர் பலியாகினர். ஏறத்தாழ 200 பேர் காயமடைந்தனர்.

பாரீஸில் முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, சிரியா - இராக்கில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

உள்நாட்டில் ரகசியமாக செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் உதவியுடன் இந்த தாக்குதலை சிரியா தீவிரவாதிகள் நடத்தியிருப்பதும் பிரான்ஸ் போலீஸாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து பிரான்ஸ், பெல்ஜியம் உள்பட ஐரோப்பிய நாடுகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். பிரான்ஸில் சிறப்புபடை எடுத்த அதிரடி நடவடிக்கையில் பெண் தீவிரவாதி உள்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பின்னர் நடந்த விசாரணையில் பாரீஸில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள், அகதிகள் போர்வையில் ஊடுருவியது தெரியவந்தது. இவர்களில் 3 தீவிரவாதிகள் பாரீஸ் நகரவாசிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x