Published : 27 Dec 2015 11:21 AM
Last Updated : 27 Dec 2015 11:21 AM
பெல்ஜியம் சாக்லெட்டுகள் உலகப்புகழ் பெற்றவை. பெல்ஜியத்தில் உருவான ‘டின்டின்’ என்ற காமிக்ஸ் கதாபாத் திரம் பல குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.
பெல்ஜியம் பீர் புகழ் பெற்றது. பெல்ஜியத்தில் உள்ள தொன்மை யான, அற்புதமான கட்டிடங்களைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.
ஆனால் இதையெல்லாம் புறம் தள்ளும்படி சமீப காலத்தில் பெல் ஜியம் வேறு ஒன்றுக்காக செய்தி களில் இடம்பெற்று வருகிறது. இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பெல்ஜியம் அடைக்கலமாகிறது! சமீபத்தில் பிரான்சின் பல பகுதி களில் கோரத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் பெல்ஜிய நாட்டிலிருந்து வந்த வர்கள் என்பதுதான் அந்தச் செய்தி.
நெதர்லாந்து, ஜெர்மனி, லக்சம் பர்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்டிருக்கிறது பெல்ஜியம்.
ஐரோப்பிய யூனியனின் தலைநகரம் பெல்ஜியத்தில்தான் உள்ளது. நேட்டோ அமைப்பின் தலைமையிடமும் இந்த நாட்டில் தான் இருக்கிறது. டச்சு, பிரெஞ்ச் ஆகிய இரண்டு மொழிகளைப் பேசுபவர்களும் இங்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளனர்.
தீவிரவாதம் உச்சத்தை அடையும் பல நிகழ்வுகளில் ஏதோ ஒருவிதத்தில் பெல்ஜியம் சம்பந்தப்பட்டிருக்கிறது. இது பலருக்கும் வியப்பளித்திருக் கலாம். எதனால் இப்படி?
அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தாக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு - அதாவது 2001 செப்டம்பர் 9 அன்று வேறொரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது. ஆப்கானிஸ்தானில் அகமது மசூத் என்ற தளபதி-தலைவர் இரண்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். மசூத் தலிபா னுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்.
சரி. இதில் எங்கே பெல்ஜியம் வந்தது? கொலையாளிகளான அந்த இரு தீவிரவாதிகளும் பெல்ஜியம் நாட்டு பாஸ்போர்ட் களை வைத்துக் கொண்டுதான் ஆப்கானிஸ்தானில் நுழைந்திருக் கிறார்கள்.
மே 2004-ல் பெல்ஜியத்தின் தலைநகரமான ப்ரஸல்ஸில் யூத அருங்காட்சியகத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இவர்களைக் கொன்ற தீவிரவாதி சமீபத்தில் பெல்ஜியம் தலைநகரில் பிடிபட்டிருக்கிறான்.
இருபது வருடங்களுக்கு முன்பே பெல்ஜியத்துடன் தீவிர வாதம் இணைத்து பேசப்பட்டது. இருபது வருடங்களுக்கு முன் ஒரு வீட்டை திடீரென்று சோதனை யிட்டது பெல்ஜிய காவல் துறை. அவர்களது நோக்கம் அல்ஜிரியா விலுள்ள GIA என்ற தீவிரவாத அமைப்பு தொடர்பானது.
அந்த வீட்டில் இருந்த ஒரு பெரிய நூலின் முதல் பக்கத்தில் “இது அல்-காய்தாவுக்கும், ஒசாமா பின்லேடனுக்கும் சமர்ப்பணம்” என்று எழுதியிருந்தது!. ஐரோப்பா வில் கைப்பற்றப்பட்ட முதல் ஜிகாத் ஆவணம் என்று இதைக் கூறுவார்கள். தீவிரவாதிகள் பெல்ஜியத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? அப்படி என்ன சாதகமான அம்சங்கள் பெல்ஜியத்தில் உள்ளன.
தலைநகர் ப்ரஸல்ஸில் 19 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மேலென்பீக். இது அடிக்கடி தீவிரவாதிகளின் செயல்பாடு தொடர்பான செய்தி களில் அடிபடுகிறது. இந்த மாவட் டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கிறார்கள். இங்கு வேலையில் லாத் திண்டாட்டம் மிக அதிக மாகவே இருக்கிறது. கிட்டத் தட்ட மூன்றில் ஒரு பங்கு வெளி நாடுகளிலிருந்து இங்கு வந்த வர்கள்.
இங்கு வசிக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்கு தங்களுக்கு சமமான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்றும், மதத்தின் காரணமாக ஒதுக்கப்படுகிறோம் என்ற எண்ணமும் அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் தீவிரவாதிகளுக்கு இரையாகும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் (பெல்ஜி யத்தில்) இப்படி தீவிரவாதத்துக்கு அனுதாப அலை வீசுவது தீவிரவாதிகளுக்கு ஒரு சாதகமான அம்சம். தவிர பெல்ஜியம் இருக்கும் இடம் அவர்களைக் கவர்கிறது. பெல்ஜியத்தை சாலைகள் வழியாகவே இரண்டு மணி நேரத்தில் கடந்து விடலாம்.
ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற பல நாடுகளுக்கு மிக அருகாமையில் இருக்கிறது பெல்ஜியம். இந்த நாடுகளில் ஏதாவது ஒன்றில் நாசவேலையைச் செய்துவிட்டு பெல்ஜியத்துக்கு மீண்டும் வந்து விடலாம். ஷெங்கன் விசா என்ற வசதியின் மூலம் பெல்ஜியத்துக்குள் நுழைந்து விட்டால் அங்கிருந்து பெரும் பாலான பிற ஐரோப்பிய நாடு களுக்குள் விசா இல்லாமலேயே நுழைய முடியும்.
இன்னொரு காரணமும் உண்டு. அதுபற்றி பின்னர் பார்ப்போம்.
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT