Published : 16 Apr 2021 02:11 PM
Last Updated : 16 Apr 2021 02:11 PM
குழந்தைகளுக்கெனத் தனி இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸ்க்கர்பர்க்குக்கு அமெரிக்காவைச் சேர்ந்த சிசிஎஃப்சி வழக்கறிஞர்கள் குழு கடிதம் கடிதம் எழுதியுள்ளது.
உலகம் முழுவதும் மிகப்பெரிய சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் விளங்கி வருகிறது. இதில் 13 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே கணக்கு தொடங்கி, பராமரிக்க முடியும். இந்நிலையில் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காகத் தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்க ஃபேஸ்புக் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக சில நிறுவன உரையாடல்களும் பொதுவெளியில் கசிந்தன.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சிசிஎஃப்சி எனப்படும் வணிகம் இல்லாத குழந்தைப்பருவத்திற்கான பிரச்சாரம் (Commercial-Free Childhood) என்ற அமைப்பின் வழக்கறிஞர் குழு, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸ்க்கர்பர்க்குக்குக் கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ''மதிப்பு மிகுந்த குடும்பங்களின் தகவல்கள் மற்றும் புதிய தலைமுறை இன்ஸ்டாகிராம் பயனர்களின் தகவல்களைச் சேகரிப்பது ஃபேஸ்புக்குக்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். ஆனால், இளம் குழந்தைகளை ஆபத்தில் தள்ளும்.
இளம் பருவத்தினர் தங்களின் தோற்றம் மற்றும் சுய முன்னிலைப்படுத்துதலில் தொடர்ச்சியான கவனம் செலுத்துவது, அவர்களின் தனியுரிமை மற்றும் வாழ்க்கைக்குச் சவாலாக இருக்கும். மிகுந்த அபாயத்தை ஏற்படுத்தும். இதனால் இந்தத் திட்டத்தை மார்க் ஸக்கர்பெர்க் நடைமுறைப்படுத்தக்கூடாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு ஃபேஸ்புக் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT