Last Updated : 09 Apr, 2021 06:08 PM

1  

Published : 09 Apr 2021 06:08 PM
Last Updated : 09 Apr 2021 06:08 PM

சோகத்தில் மூழ்கியது பிரிட்டன்: ராணி 2-ம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்

எடின்பர்க் கோமகன், பிரிட்டன் இளவரசர் பிலிப்: படம் உதவி | ட்விட்டர்.

லண்டன்

பிரிட்டன் இளவரசரும், ராணி எலிசபெத்தின் கணவருமான எடின்பர்க் கோமகன் பிலிப் இன்று காலமானார். அவருக்கு வயது 99. இதனை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் கரோனா வைரஸ் பரவல் அடங்கிவரும் நிலையில், கடந்த ஜனவரி மாதம்தான் ராணி எலிசபெத், கோமகன் பிலிப் இருவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

ராணி எலிசபெத்தின் வலிமையாகவும், அவருடன் வாழ்க்கையில் இணைந்திருந்த எடின்பர்க் கோமகன் பிலிப்பின் மறைவு 94 ஆண்டுகால அரச குடும்பத்துக்கு மாபெரும் இழப்பாகும். முன்னாள் கப்பற்படை வீரரான பிலிப், ராணி எலிசபெத்தைத் திருமணம் செய்தபின் பெரும்பாலும் மக்கள் நலப் பணிகளிலும், தொண்டுப் பணிகளிலும் ஈடுபட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி இதயக்கோளாறு மற்றும் தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பிலிப் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத சிகிச்சைக்குப் பின் அரண்மனைக்குச் சென்ற நிலையில் இன்று உயிரிழந்தார்.

எடின்பர்க் கோமகன் பிலிப் மறைவுச் செய்தி கேட்டு பிரிட்டனே சோகத்தில் மூழ்கியுள்ளது. அரச குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், "ராணி 2-ம் எலிசபெத்தின் அன்புக்குரிய கணவர் எடின்பர்க் கோமகன் இளவரசர் பிலிப் காலமானார். வின்ட்சர் கேஸ்டலில் இன்று காலை இளவரசர் பிலிப் காலமானார். உலகம் முழுவதும் உள்ள மக்களின் வேதனைகளை அரச குடும்பத்தினர் பகிர்ந்து கொள்கின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு தனது 96-வது வயதில் பிலிப் பொது வாழ்க்கைப் பணியிலிருந்து விலகினார். வரும் ஜூன் மாதம் 100-வது பிறந்த நாளை பிலிப் கொண்டாட இருந்த நிலையில், பிரிட்டன் அரச பரம்பரையில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் எனும் பெருமையைப் படைக்கும் சூழலில் உலகை விட்டுப் பிரிந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் ராணி எலிசபெத், இளவரசர் பிலிப் இருவரும் தங்களின் 73-வது திருமண நாளைக் கொண்டாடினர்.

இளவரசர் பிலிப்புக்கு உடல்நலத்தில் பெரிதாக எந்தப் பிரச்சினையும் இல்லை. 2011-ம் ஆண்டு இதயத்தில் லேசான அடைப்பு ஏற்பட்டதையடுத்து, அதில் ஸ்டென்ட் வைக்கப்பட்டது. முதுமை காரணமாக 2018, 2019-ம் ஆண்டுகளில் பிலிப்புக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வின்ட்சார் கேஸ்டலில் நடந்த ராணுவ அணிவகுப்பு மரியாதையின்போது கடைசியாக மக்கள் முன் கோமகன் பிலிப் தோன்றினார். அதன்பின் வெளி உலகிற்கு வரவில்லை.

கிரீஸ் டென்மார்க் அரச குடும்பத்தில் கடந்த 1921-ம் ஆண்டு, கோர்பு எனும் தீவில் பிலிப் பிறந்தார். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கல்வி பயின்ற பிலிப் 1939-ம் ஆண்டில் பிரிட்டன் கடற்படையில் தனது 18-வது வயதில் சேர்ந்தார். 1934-ம் ஆண்டு முதல் முறையாக ராணி எலிசபெத்தை அவரின் 13-வது வயதில் பிலிப் சந்தித்தார். 1939-ம் ஆண்டு 2-ம் உலகப்போர் நடந்தபோது, ராணி எலிசபெத், பிலிப் இடையே பேச்சுவார்த்தைகள், சந்திப்புகள் அடிக்கடி நிகழ்ந்தன.

இதையடுத்து, 2-ம் உலகப் போர் முடிந்தபின் 6-ம் ஜார்ஜ் மன்னர் சம்மதத்துடன் 1947-ம் ஆண்டு, நவம்பர் 20-ம் தேதி எலிசபெத்தை, பிலிப் திருமணம் செய்தார். திருமணத்துக்கு முன்பாக தன்னுடைய பட்டமான கீரீஸ் டென்மார்க் அரச குடும்ப பட்டத்தைத் துறந்த பிலிப், அதன்பின் தனது மூதாதையர்களின் பெயரான மவுன்ட்பேட்டன் பெயரை புனைபெயராக வைத்துக்கொண்டார்.

1952-ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணியாற்றிய பிலிப், 1952-ல் ராணியாக எலிசபெத் மூடிசூடப்பட்டபின் பதவியிலிருந்து விலகினார். 1957-ம் ஆண்டு பிரிட்டனின் இளவரசராக பிலிப் முடிசூடப்பட்டார். ராணி எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதிக்கு சார்சலஸ், ஆனே, ஆன்ட்ரூ, எட்வர்ட் என 4 குழந்தைகளும், 8 பேரக் குழந்தைகளும், 9 கொள்ளுப்பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x